மதுரை உயர்நீதிமன்ற கிளை


திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தனபாலன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில்  தாக்கல் செய்த பொதுநல மனு. அதில், ‘திண்டுக்கல் மாநகராட்சி மாமன்ற உறுப்பினராக உள்ளேன். தமிழ்நாடு வெளிப்படை ஏல அறிவிப்பு சட்டத்தின்படி ஏல அறிவிப்பை உள்ளூர் செய்தித்தாள்களில் விளம்பரம் செய்ய வேண்டும். மேலும் ஏலத்தில் அதிக தொகை கேட்கும் நபருக்கு ஏலம் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். திண்டுக்கல் மாநகராட்சி சார்பாக காமராஜர் பஸ் நிலையத்தில் உள்ள 34 கடைகள் வாடகைக்கு விடுவதற்கான ஏல அறிவிப்பை நடத்துவதற்கான மாநகராட்சி கூட்டம் 2022 நவம்பர் 17-ம் தேதி நடந்தது. ஏல அறிவிப்பை உள்ளூர் செய்தித்தாள்களில் வெளியிட வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யப்படவில்லை. மேலும் 34 கடைகளுக்கான ஏலம் நடைபெற்றது. இதில், மொத்தமாக 47 நபர் மட்டுமே கலந்து கொண்டனர்.


கோரிக்கை மனு


தமிழ்நாடு வெளிப்படை தன்மை ஏல அறிவிப்புச் சட்டத்தின்படி ஏலம் நடைபெறுவதற்கு 15 நாட்களுக்கு முன்பு உள்ளூர் அல்லது மாவட்ட அளவிலான செய்தித்தாள்களில் விளம்பரம் கொடுத்திருக்க வேண்டும். அனைத்து பொதுமக்களும் கலந்து கொள்ளும் படி இருக்க வேண்டும். ஆனால், திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட காமராஜர் பஸ் நிலையத்தில் உள்ள 34 கடைகளுக்கான ஏலம் அவ்வாறு நடைபெறவில்லை. எனவே, திண்டுக்கல் காமராஜர் பஸ் நிலையத்தில் உள்ள 34 மாநகராட்சி கடைகள் ஏலம் மூலம் ஒதுக்கீடு செய்த அறிவிப்பிற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். மேலும் இந்த 34 கடைகளுக்கான ஒதுக்கீட்டினை ரத்து செய்து, மீண்டும் எல அறிவிப்பை முறையாக  வெளியிட்டு முறையாக நடத்த உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கூறியிருந்தார்.


நீதிபதிகள் உத்தரவு


இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது  நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், திண்டுக்கல் மாநகராட்சி 34 கடைகளுக்கான ஏலத்தில்  தமிழ்நாடு ஏல அறிவிப்புச் சட்டம் முறையாக பின்பற்றப்படவில்லை. எனவே திண்டுக்கல் மாநகராட்சிக்கு சொந்தமான 34 கடைகளில் ஏலம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு கடைகளை ஒதுக்கீடு செய்ய இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மாநகராட்சி கடைகள் ஏலம் குறித்து மார்ச் 23ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில் இந்த மனு, நீதிபதிகள். டி.கிருஷ்ணகுமார் மற்றும் ஆர். விஜயகுமார் அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் தற்போது வரை பதில் மனு  தாக்கல் செய்யாததால் இடைக்கால தடை உத்தரவை நீட்டிப்பு செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Madurai Hc: கள்ளழகர் மீது பிரஷ்சர் பம்பு மூலம் நீர் பீய்ச்ச தடை கோரிய வழக்கு - ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு


மேலும் செய்திகள் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - NDA Alliance: பாஜக கூட்டணி தொகுதிப் பங்கீடு நிறைவு; ஒதுக்கப்பட்ட ஓபிஎஸ்? யார் யாருக்கு எத்தனை தொகுதிகள்?