மதுரை சித்திரைத் திருவிழா

 

மதுரையின் பல நூற்றாண்டு கால அடையாளமாகவும், மதுரையின் நடுவிலும் மிகப் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. ஆன்மீகம், வரலாறு, கலை, பண்பாட்டு அடையாளங்களுடன் மீனாட்சி கோயில் இன்றளவும் திகழ்கிறது. சித்திரை திருவிழாவில் சுவாமி புறப்பாடுக்கு முன் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டமாக இருக்கும். டங்கா மாடு, யானை, குதிரை, ஒட்டகம் என்று விலங்குகள் சில குழந்தைகள் உற்சாகப்படுத்தும். இந்நிலையில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் சித்திரை திருவிழா 2024 - கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியாகியுள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

சிகர நிகழ்ச்சி

 

சிகர நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி ஏப்ரல் 23 ஆம் தேதி அதிகாலை 5.51 மணி முதல் 6.10 மணிக்குள்ளாக நடைபெறுகிறது. தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுகிறார். ஏப்ரல் 21 ஆம் தேதி மாலை 6.25 மணிக்கு அழகர் மலையிலிருந்து புறப்படும் கள்ளழகர் வழிநெடுகிலும் உள்ள மண்டபப் படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். இந்நிலையில் கள்ளழகர் மீது அதிக விசையுள்ள பிரஷ்சர் பம்புகள் மூலம் தண்ணீர் பீய்ச்ச தடை விதிக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான மதுரை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

 

வழக்கு

 

மதுரையை சேர்ந்த நாகராஜன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘உலகப்புகழ்பெற்ற மதுரை சித்திரைத்திருவிழா ஏப்ரல் 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 23ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. பாரம்பரியமாக ஆட்டுத்தோலை பயன்படுத்தி தோல்பைகளில் நறுமணநீர் நிரப்பி துருத்தி எனும் சிறிய குழாய் மூலம் தண்ணீரை கள்ளழகர் மீது பக்தர்கள் பீய்ச்சி அடிப்பார்கள். பக்தர்கள் விரதமிருந்து தோல்பையில் தண்ணீர் சுமந்து வந்து சிறிய குழாய் மூலம் சுவாமியின் மீது பீய்ச்சி தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கம்.  ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பக்தர்கள் ஐதீகத்தை மீறி தோல் பையில் அதிக விசையுள்ள பிரஷர் பம்புகளை பொருத்தி தண்ணீரில் திரவியங்கள் மற்றும் வேதிப்பொருள்களை கலந்து பீய்ச்சுவதால் கள்ளழகர் சுவாமி, தங்கக்குதிரை வாகனம் மற்றும் சுவாமியின் விலைமதிப்பற்ற ஆபரணங்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

 

ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு

 

மேலும் திரவியம் மற்றும் வேதிப்பொருள்கள் கலந்த தண்ணீரால் பட்டர்கள், பிரசாரகர் பணியாளர்கள் மற்றும் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இந்த ஆண்டு நடைபெறும் சித்திரைத் திருவிழாவில் தண்ணீர் பீய்ச்சும் பக்தர்கள் அதிக விசையுள்ள பிரஷர் பம்புகள் மூலம் கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்ச தடை விதிக்க வேண்டும் என மனு செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனு குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.