திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே புல்வெட்டி கண்மாய் என்ற இடத்தின் அருகே பட்டிவீரன்பட்டியை பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவருக்கு சொந்தமான பில்டிங்கில் இந்து முன்னனி கட்சியைச் சேர்ந்த மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயராமன் என்பவர் கடந்த 10 வருடங்களாக ஸ்ரீ மதுரை மீனாட்சி அம்மன் என்ற பெயரில் பட்டாசு கடையை நடத்தி வருகிறார். இந்த பட்டாசு கடையின் மேல் மாடியில் ஜெயராம் வயது (40), அவரது மனைவி நாகராணி (35) மற்றும் தீபிகா வயது (7), கனிஷ்கா வயது (5) ஆகிய இரண்டு பெண் குழந்தைகளும் மோகன் வயது (4) என்ற மகனும் குடியிருந்து வந்தனர்.
இந்நிலையில் இந்த கடையில் நேற்று மாலை ஜெயராமன் இவரது மனைவி நாகராணி ஆகிய இருவரும் மாடி வீட்டில்தான் இருந்துள்ளனர். இவரது குழந்தைகள் மாடிக்கு கீழே சாலையோரமாக விளையாடிக் கொண்டிருந்தனர். திடீரென பயங்கரமாக இரண்டு முறை சத்தம் கேட்டுள்ளது. பட்டாசு வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் அந்த பட்டாசு கடையை ஒட்டி இருந்த வணிக வளாகம் மற்றும் கடையின் மேல் மாடியில் இருந்த வீடு இடிந்து முற்றிலும் சேதமானது.
மேலும், இந்த விபத்தில் சேதமான கட்டடத்தின் ஈடுபாடுகளுக்கிடையே கடையின் உரிமையாளர் ஜெயராமன் அவரின் மனைவி நாகராணி இருவரும் சிக்கி உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த காவல் துறையினர். மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் மீட்பு பணியில் நான்கு ஜேசிபி இயந்திரங்கள் மற்றும் ஆத்தூர் தீயணைப்புத் துறையினர், திண்டுக்கல் தீயணைப்புத் துறையினர் மற்றும் வத்தலகுண்டு தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட வீரர்கள் ஈடுபட்டனர். மாலை 5:30 மணிக்கு ஏற்பட்ட இந்த வெடி விபத்து சம்பவத்தில் 6-மணி நேரத்திற்கு மேலாக மீட்பு பணி நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று தீவிர விசாரணையில் ஈடுபட்டார். மேலும், ஊரக வளர்ச்சிதுறை அமைச்சர் ஐ.பெரியசாமி சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். இந்த சம்பவம் குறித்து செம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.