அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 26 காளைகளை அடக்கி மாடுபிடி வீரர் அபி சித்தர் முதல் பரிசை தட்டி சென்றார். ஏனாதியை சேர்ந்த மாடுபிடி வீரர் அஜய் 20 காளைகளை அடக்கி இரண்டாம் இடத்தையும், அலங்காநல்லூரை சேர்ந்த மாடிபிடி வீரர் ரஞ்சித் 12 காளைகளை அடக்கி 3ம் பரிசை வென்றனர். 


முழு விவரம்: 


சிறந்த வீரர்கள்


1. பூவந்தியை சேர்ந்த அபி சித்தர் - 26 காளைகள் (ரோஸ் எண்: 25)


2. ஏனாதியை சேர்ந்த அஜய் - 20 காளைகள் (சந்தன எண்: 103)


3. அலங்காநல்லூரை சார்ந்த ரஞ்சித் - 12 காளைகள் (நீல எண்: 36)


சிறந்த மாடுகள்


1. புதுக்கோட்டை கைக்குறிச்சி தமிழ்செல்வன்


2. புதுக்கோட்டை எம்.எஸ்.சுரேஷ் மாடு


3. உசிலம்பட்டி வெள்ளம்பழம்பட்டி பட்டானி ராஜா மாடு


தமிழர்களின் அடையாளமான பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகை என்றாலே எப்போதும் நமது நினைவில் இருப்பது ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆகும். புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் நிறைவடைந்த நிலையில் உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று தொடங்கியது.


இந்த புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமாகிய உதயநிதி ஸ்டாலின் பச்சை கொடி காட்டி தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ள உதயநிதி ஸ்டாலின் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று மதுரை வந்தடைந்தார்.


ஜல்லிக்கட்டு போட்டி தொடங்குவதற்கு முன்பாக வீரர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். முதலில் கோவில் காளைக்கு பூஜை செய்யப்பட்டு அவிழ்க்கப்பட்டது. இதையடுத்து, போட்டியில் பங்கேற்கும் காளைகள் வாடிவாசலில் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்க்கப்பட்டது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன்  அமைச்சர்கள் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர். அமைச்சர்களும், முக்கிய பிரமுகர்களும், ஆயிரக்கணக்கான மக்களும் குவிந்துள்ளதால் அலங்காநல்லூர் முழுவதும் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர். 


காலை ஜல்லிக்கட்டு தொடங்கியது முதலே காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், அடங்காத காளைகளுக்கும் தங்க மோதிரம், தங்க காசுகள் வழங்கப்பட்டது. 


காலை 8 மணிக்கு தொடங்கிய அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 10 சுற்றுகளாக நடைபெற்று மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. மொத்தமாக 823 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டது. அதில், 23 காளைகளை அடக்கி அபி சித்தர் என்ற மாடுபிடி வீரர் முதல் பரிசான காரை தட்டி சென்றார். 






அதேபோல், புதுக்கோட்டை மாவட்டம் கைக்குறிச்சியை சேர்ந்த தமிழ்செல்வன் என்பவரின் காளை சிறந்த காளையாக தேர்ந்தேடுக்கப்பட்டு, காளையின் உரிமையாளருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கார் வழங்கினார்.