தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் அமைந்துள்ள ஏழை விவசாயிகள் சங்க கல்லூரியின் முதல்வர் முனைவர் எஸ். சிவக்குமார் வழிகாட்டுதலின்படி கல்லூரி வரலாற்று துறையில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வரும் முனைவர் சி. மாணிக்கராஜ் திண்டுக்கல் மாவட்டம் நெல்லூர் அரசு கள்ளர் உயர்நிலைப் பள்ளியின் வரலாற்று ஆசிரியர் கருப்பையாவுடன் இணைந்து தொல்லியல் சார்ந்த கள மேற்பரப்பாய்வுகள் புதிய தொல்லியல் தடங்களை கண்டறிந்து வருகின்றனர்.




திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவர் அளித்த தகவலின் படி நத்தம் பட்டத்தரசி அம்மன் கோவில் முன்பு ஆய்வு செய்ததில் அங்கு காலத்தால் கி.பி 16, 17- ஆம் நூற்றாண்டை சேர்ந்த நாயக்கர் காலத்து குதிரை வீரன் நடுக்கல் ஒன்றை கண்டறிந்தனர்.


இவ்வாய்வு பற்றி ஆய்வாளர் மாணிக்கராஜ் கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள இன்றைய நத்தம் என்ற ஊர் சங்க கால முதல் நாயக்கர் காலம் வரையிலான பல வரலாற்றுச் சான்றிதழ்களை பெற்றுள்ளது. இதைத் தவிர இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது சில முக்கியமான போராட்ட நிகழ்வுகள் நடைபெற்ற ஊராகவும் தமிழக வரலாற்றில் இடம்பெற்றுள்ளது.




நத்தம் என்பதற்கு விளைநிலம் சார்ந்த மக்கள் வாழ் இடம் என்றும் ஊர் ஒன்று இருந்து அழிந்த இடத்தையும் குறிக்கும் சொல்லாக பொருள் கொள்ளப்படுகின்றது. பிற்கால பாண்டியர்கள் காலத்தில் நத்தம் ஊரும் அதை சுற்றியுள்ள பகுதிகளும் துவராபதி நாடு என்ற நாடு பிரிவில் இருந்துள்ளது. துவராபதி வேளாண் என்ற நாட்டுப்பிரிவில் இருந்துள்ளது. துவராபதி வேளாண் என்ற சிற்றரசு மரபினர் பாண்டியருக்கு கட்டுப்பட்டு இப்பகுதியை ஆட்சி செய்துள்ளனர்.இவர்கள் பெயரிலேயே துவராபதி நாடு என்ற பெயரும் ஏற்பட்டுள்ளது. இவர்கள் காலத்திலேயே சுதந்திர சோழ சதுர்வேதி மங்கலம் எரிவடைநல்லூர் என்ற பெயர்களிலும் அழைக்கப்பட்டுள்ளது.




சேர நாட்டில் இருந்து வணிக பெருவழி பாதையும் சோழ நாட்டிலிருந்து ஒரு வணிக பெருவழிப் பாதையும் நத்தத்தில் இணைந்து பின்னர் மதுரை சென்றுள்ளதை வரலாறு கூறுகின்றன. வரலாற்று சிறப்புகளை பெற்றுள்ள நத்தத்தில் பட்டத்தரசி அம்மன் கோவிலுக்கு முன்பு 3 அடி உயரம், 3 அடி அகலத்தில் வீரன் ஒருவன் அலங்கரிக்கப்பட்ட குதிரையில் அமர்ந்த நிலையில் புடைப்புச் சிற்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளான். நாயக்கர் காலத்தில் வீரர்கள் அணியும் கொண்டை அமைப்புடன் வலது கையில் பிடித்துள்ள ஈட்டியை முன்னோக்கி வீசி எறிவது போன்ற தோற்றத்திலும், இடதுகை குதிரையின் கடிவாளத்தை பிடித்த நிலையிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. குதிரை வீரனின் வீர மரணத்திற்கு பின்பு அவனுடைய இரு மனைவியர்களும் சதி என்னும் உடன் கட்டை ஏறி உயிர் நீத்துள்ளனர் என்பதை வெளிக்காட்டும் சிற்பங்களாக குதிரைக்கு முன் வடிவமைக்கப்பட்டுள்ளனர். இவ்விரு பெண்களும் நாயக்கர் காலத்து பட்டத்தரசிகள் அணியும் குந்தளம் எனும் கொண்டை அணிந்துள்ளனர்.


குதிரைக்கு பின்னால் இரு சேவகர்களின் சிற்பம் உள்ளது. அதில் ஒரு சேவகர் குதிரை வீரனுக்கு குடை பிடித்தபடி உள்ளார். பொதுவாக குதிரையும், சேவகர்களும் குடை பிடித்து காட்சியும் குறுநில மன்னர், தளபதி ஆகியோருக்காக எடுக்கப்படும். நடுக்கலில் காட்டப்படும் இவற்றுடன் ஆடை, ஆபரணங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இக்குதிரைவீரன் இப்பகுதியை நாயக்கர் காலத்தில் ஆட்சி செய்த குறுநில மன்னன் அல்லது தளபதியாக இருக்கலாம் ஆட்சி செய்த குறுநில மன்னன் இவன் இங்கு நடைபெற்ற சண்டையில்  வீர மரணம் அடைந்த பின் அவன் நினைவாக இந்நடுகல் எடுக்கப்பட்டிருக்க வேண்டும் மேலும் நடுக்கல்லில் கல்வெட்டு சான்றுகள் இல்லாததால், சரியான செய்தியை அறிய முடியவில்லை. இப்பகுதி மக்கள் நடுகல்லை பட்டாணி வீரன் சாமி என அழைக்கின்றனர்.