பரிதாபம், கருணையை தாண்டி மாற்றுத்திறனாளிகளுக்கு  சொந்த கால்களில் நிற்கிறோம் என்ற நம்பிக்கையை தந்துள்ளது  'தேங்கி யூ புட்ஸ்'. மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ளது, சுந்தர்ராஜன்பட்டி. இங்கு உள்ள பார்வையற்றோர் பள்ளியின் நீட்சியாக பேக்கரி நிறுவனத்தை சிறப்பாக இயக்கி வருகிறது, இந்தியன் பார்வையற்றோர் சங்கம். இந்த பேக்கரி நிறுவனம் பல்வேறு பாராட்டுக்களை பெற்று வருகிறது.



 

தனது 13-வயதில் பார்வையை தொலைத்தார் எஸ்.முகமது அலி ஜின்னா. பார்வைச் சவால் கொண்ட ஒவ்வொரு நபர்களும் படும் துயரத்தை உணர்ந்த அவர் படிப்பின் மீது ஆர்வத்தை செலுத்தி அமெரிக்காவில் கல்வி கற்க வாய்ப்பை பெற்றார். தொடர்ந்து அமெரிக்காவில் கல்வியை முடிந்தபின் மீண்டும் இந்தியா திரும்பி அவர் பார்வைச் சவால் கொண்ட ஒவ்வொரு நபர்கள் அடையும் துயரை போக்க இந்தியன் அசோசியேஷன் ஃபார் பிளைண்ட்ஸ் என்ற அமைப்பை உருவாக்கி கல்வி, பயிற்சி, வேலை வாய்ப்பு ஆகியவற்றை பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கினார். இதன் மூலம் உணவு, உடை, உறைவிடம், மருத்துவம், கல்வி என அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முடிந்தது.



 

கடந்த 36 ஆண்டுகளுக்கு மேல் தற்போது வரை இந்த அமைப்பின் மூலம் 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட பார்வை மாற்றுத்திறனாளிகள் பயன்பெற்றுள்ளனர். இதனால் இந்திய அரசு சார்பாக 3 விருதியை பெற்றுள்ளது இந்த அமைப்பு. பெரும் முயற்சியில் வெற்றிகண்ட ஜின்னா அவர்களுக்கு பின் தற்போது அவரது மகன் அப்துல் ரஹீம் அமைப்பை நடத்தி வருகிறார். கல்வியை மட்டும் கொடுத்தால் போதாது அவர்கள் வாழ் நாள் முழுதும் சொந்தமாக பிழைக்க தொழில்களும் வேண்டும் என பேக்கரி நிறுவத்தை துவங்கி பல்வேறு வகை மாற்றுத்திறனாளிகளை பணி அமர்த்தியுள்ளார். மதுரை, சென்னை, கோவையில் தேங்கி யூ பேக்கரி சிறப்பாக நடைபெற்று வருகிறது.



 

இது குறித்து நிறுவனர் அப்துல் ரஹீம் கூறுகையில்..., " உலகில் மூலை முடுக்கெல்லாம் இருக்கும் தொழில் உணவுத் தொழில் தான். அதில் மாற்றுத்திறனாளிகள் பங்கு இருந்தால் அவர்கள் எப்போதும் அதில்  தொடர முடியும் என பேக்கரி நிறுவனம் ஆரம்பித்தோம். அனைவருக்கும் நன்றி சொல்லும் விதமாக தேங்க் யூ என்று பெயரிட்டோம். ஸ்வீட், காரம், பேக்கரி வகையென தற்போதைய காலத்திற்கு ஏற்றார் போல் உணவுகளை சுத்தமான முறையில் தயார் செய்கிறோம். தற்போது 60க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பணி செய்தி வருகின்றனர். அவர்களுக்கு உதவியாக மாற்றுத்திறனாளிகள் அல்லாதோரும் பேக்கரியில் பிற பணிகளை செய்கின்றனர். இந்த முயற்சி நீண்டு இந்தியா முழுவதும் 10 ஆயிரம்  மாற்றுத்திறனாளி நபர்களுக்கு வேலைக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பது தான் இழக்கு. அதை நோக்கி பயணம் செய்து வருகிறோம். நேரடி விற்பனை போக ஐ.டி நிறுவனம், மருத்துவமனை, டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் என பல நிறுவங்களுக்கும் எங்கள் உணவுப் பொருட்களை வழங்கி வருகிறோம். தொடர்ந்து ஆதரவு கிடைக்கிறது என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.



 

தேங்க் யூ ஃபுட்ஸில் பணி செய்யும் கோபாலகிருஷ்ணன் கூறுகையில்.., " முழுமையாக பார்வை இழந்த நான் கடந்த 8 வருடமாக ஐ.ஏ.பி.,யில் இருக்கிறேன். தற்போது எங்களின் தேங்க்யூ பேக்கரியில் டெலி கால்ஸ் வழியாக ஆர்டர் எடுத்துவருகிறேன். காதுகேளாதோர், நடக்கமுடியாதவர், உயரம் குறைந்தவர் என பல்வேறு வகையான மாற்றுத்திறனாளிகளும் எங்கள் நிறுவனத்தில் பணி செய்துவருகிறோம். நாங்கள் செய்ய முடியாத பணிகளை மாற்றுத்திறனாளிகள் அல்லாதோர் செய்கின்றனர். இப்படி ஒருவருக்கொருவர் உதவியோடு எங்கள் நிறுவனம் செயல்படுகிறது" என்றார்.

 

பல மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் தேங்கியூ பேக்கரிக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.