மதுரை மாநகர் எல்கைக்கு உட்பட்ட விளக்குத்தூண் காவல் நிலையத்தில் காவலர் கண்ணன் மற்றும் சரவணன் இருவரும் இரவு நேர ரோந்து பணியில் வழக்கம்போல் ஈடுபட்டுள்ளர். இந்நிலையில்  நள்ளிரவு 12.30மணியளவில் நெல்பேட்டை அருகே உள்ள கடை ஒன்றின் முன்பாக  நின்றுகொண்டிருந்தபோது  அந்த பகுதியில் இருந்த முகம்மது இதிரீஸ் என்பவருக்கு சொந்தமான 110 வருட பழமையான கட்டிடம் திடிரென இடிந்து விழுந்தது. இதனால் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி காவலர் சரவணன் சம்பவ இடத்திலயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில் மற்றொரு காவலரான கண்ணன் பலத்த காயங்களுடன் மாட்டுத்தாவணி அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இந்நிலையில் கட்டிட விபத்தில் உயிரிழந்த காவலரின் உடலுக்கு தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி நேரில் அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். 





 உயிரிழந்த காவலர் சரவணனின் உடல் மதுரை குற்றப்பிரிவு பகுதியிலுள்ள காவலர் குடியிருப்பில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட நிலையில் தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி சைலேந்திரபாபு காவலர் சரவணனின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பின்னர் காவலரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.



இதனை தொடர்ந்து வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, தென்மண்டல ஐ.ஜி அன்பு, மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன், எம்.எல்.ஏக்கள் பூமிநாதன் , வெங்கடேசன் உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதனையடுத்து டி.ஜி.பி சைலேந்திரபாபு சம்பவம் நடைபெற்ற பகுதியை ஆய்வு மேற்கொண்ட பின்னர் , சிகிச்சையில் உள்ள காவலர் கண்ணன் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.



 

அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்து டிஜிபி சைலேந்திரபாபு, ”இரவு ரோந்து பணியின் போது கட்டிட விபத்தில் உயிரிழந்த தலைமை காவலர் சரவணனின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறோம். சரவணின் குடும்பத்தினருக்கு 25 லட்சம் நிதியுதவியும், அரசு பணியும், கண்ணனின் குடும்பத்திற்கு 5லட்சம் நிதியுதவியும் அறிவித்த தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி தெரிவித்துகொள்கிறோம். சிகிச்சையில் உள்ள கண்ணன் விரைவில் குணமடைய பிராத்திக்கிறேன். மதுரை நகரில் பழமையான கட்டடங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டுள்ள நிலையில் இனி இது போன்ற நிகழ்வு நடக்காமல் தடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கட்டட இடிந்த விவகாரத்தில் வழக்குபதிவு விசாரணை நடைபெற்றுவருகிறது” என்றார்.