மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாய் காரைக்குடியில் நடந்த சம்பவம் அனைத்து சமுதாய மக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அடுத்த மீனாட்சிபுரத்தில் அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் மாசி பங்குனி திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறும்.
மிகப்பிரம்மாண்டமாக நடைபெறும் கோயில் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வேண்டுதல்களோடு காப்பு கட்டி விரதம் இருப்பது வழக்கம். ஒரு வாரம் விரதத்திற்கு பின், திருவிழா அன்று முத்துமாரி அம்மனுக்கு பால்குடம் எடுத்து விரதத்தை முடித்து கொள்வார்கள்.
இதற்காக, காரைக்குடி முத்தாளம்மன் கோயிலில் இருந்து பால்குடத்தை தலையில் சுமந்தும், காவடி எடுத்தும் அம்மன் சன்னதி, செக்காலை ரோடு, நியூசினிமா வழியாக ஊர்வலமாக சென்று, முத்துமாரியம்மன் கோயிலுக்கு சென்று தங்களது வேண்டுதலை நிறைவேற்றுவர். இந்நிலையில், பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக காரைக்குடி செக்காலை ரோட்டி அமைந்துள்ள பள்ளிவாசல் வழியாக வந்த போது, அங்குள்ள ஜமாத்தார்கள் பால்குடம் ஏந்தி வருபவர்களுக்கு வெயில் தெரியாமல் இருப்பதற்காக, வழி நெடுகிலும் தண்ணீர் பாய்ச்சி குளிர்ச்சி அடைய செய்தனர்.
இக்காட்சியை கண்டவர்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தனர். மிகப்பெரும் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக இந்த சம்பவம் நடந்துள்ளது நமது தமிழ்நாட்டில் ஜாதி மதம், பேதங்கள் இல்லை என்ற உண்மையை ஆணித்தரமாக உலகிற்கு எடுத்துக்காட்டியுள்ளது. இந்நிலையில் இந்த புகைப்படத்தை பலரும் தங்களது இணையத்தில் சேர் செய்து வருகின்றனர்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் -சிவகங்கை: சித்த மருத்துவத்திற்கு ஏற்ற தலம் கோவானூர் சுப்ரமணியர் கோயில்!