தேனி மாவட்டத்தில் அரசு நிலங்களை சட்டவிரோதமாக பட்டா போட்டு கொடுத்த வழக்கில் துணை தாசில்தார் மோகன் ராமிற்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

 

தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா வடவீரநாயக்கன்பட்டி, தாமரைகுளம், கெங்குவார்பட்டி ஆகிய கிராமங்களில் கடந்த ஆட்சியில் 182 ஏக்கர் அரசு நிலம் அதிகாரிகள் துணையோடு, அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் அன்னப்பிரகாஷ் உள்ளிட்ட பலருக்கு முறைகேடாக  பட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ளது.

 

பெரியகுளம் கோட்டாட்சியர்களாக இருந்த ஆனந்தி, ஜெயப்பிரதா, தாசில்தார்கள் கிருஷ்ணகுமார், ரத்னமாலா, துணைத் தாசில்தார்கள் மோகன்ராம், சஞ்சீவ்காந்தி, சர்வேயர்கள் பிச்சைமணி, சக்திவேல், விஏஓ சுரேஷ் குமார், அதிமுக ஒன்றியச் செயலாளராக இருந்த அன்னப்பிரகாஷ், அதிமுக பிரமுகரின் உறவினர் முத்துவேல் பாண்டியன், அழகர், ரமேஷ்கண்ணன் உள்ளிட்டோர் மீது தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் தற்போது விசாரித்து வருகின்றனர்.  இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி துணை தாசில்தார் மோகன்ராம்  மனு தாக்கல் செய்தார்.

 

இந்த மனு நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், மனுதாரருக்கு ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து நீதிபதி, வழக்கில் சம்பந்தப்பட்ட பலர் ஜாமினில் வெளிவந்துள்ளனர். எனவே, மனுதாரருக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

 



மற்றொரு வழக்கு

 

சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதி நியாய விலை கடைகளுக்கு லாரிகள் மூலம் பொருட்களை எடுத்துச் செல்வதற்காக அறிவிக்கப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

 

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், “திருப்பத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட நியாய விலைக் கடைகளுக்கு பொருட்களை லாரிகள் மூலம்  எடுத்துச் செல்வதற்கான சிவகங்கை மாவட்ட கூட்டுறவு சங்க இணை பதிவாளர் ஏப்ரல் 2022 அறிவிப்பானை வெளியிடப்பட்டது. இதில்  சதீஷ்குமார் என்பவருக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

 

இந்த ஒப்பந்தம் விதிகளை மீறி கொடுக்கப்பட்டுள்ளது. இது சட்ட விரோமானது. எனவே இதனை  ரத்து செய்து மீண்டும் ஒப்பந்தத்தை நடத்த உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.

 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு:

 

மனுதாரர் தரப்பில் நியாவிலை கடைகளுக்கு பொருட்களை எடுத்துச் செல்வதற்கான ஒப்பந்த அறிவிப்பாணையில் உள்ள நிபந்தனைகளில் ஒப்பந்தம் எடுப்பவர் மூன்று லாரிகளுக்கு உரிமையாளர்களாக இருக்க வேண்டும் மேலும் லாரியில் ஆர்சி புக்கில் இருக்கும் பெயரும் ஒப்பந்தம் கேட்போரின்  பெயரும்  ஒன்றாக இருக்க வேண்டும் இல்லை என்றால் ஒப்பந்தம் நிராகரிக்கப்படும்  என விதிமுறை உள்ளது. ஆனால் இந்த விதிமுறைகளை எதையும் பின்பற்றாமல் சதீஷ்குமார் என்பவருக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே சிவகங்கை மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு சங்க நிர்வாக இயக்குனர் அறிவித்த ஒப்பந்தத்தை  ரத்து செய்தும் நியாய விலை பொருட்களை கொண்டு செல்வதற்கான புதிய ஒப்பந்தத்தை  சிவகங்கை மாவட்ட கூட்டுறவு பதிவாளர் மற்றும் லாரி டெண்டர் நிர்ணயக் குழு  புதிய ஒப்பந்தம் அறிவித்து மூன்று வாரத்தில் ஒப்பந்தத்தை நடத்தி முடிக்க உத்தரவிட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.