மதுரை திருப்பரங்குன்றத்தில் தவளை இருந்த ஐஸ்கிரீம் சாப்பிட்ட மூன்று குழந்தைகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

 

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள முருகன் கோவிலில் நேற்று  தைப்பூசத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் மதுரை மாவட்டத்தில் இருந்தும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டத்தில் இருந்தும் வந்து தரிசனம் செய்து விட்டு சென்ற வண்ணம் இருந்தனர். 

 

தைப்பூச சிறப்பு தரிசனத்துக்காக மதுரையில் உள்ள டிவிஎஸ் நகருக்கு அருகில் அமைந்துள்ள கோவலன் நகரில் உள்ள மணிமேகலை தெருவைச் சேர்ந்தவர்கள் அன்புச் செல்வம் ஜானகி ஸ்ரீ தம்பதியினர் தங்களது குடும்பத்துடன் வந்துள்ளனர். இவர்களுக்கு நித்ரா ஸ்ரீ(வயது 8). ராட்சன ஸ்ரீ(வயது 7) என 2 மகள்கள்  உள்பட ஒரு மகன் என 3 குழந்தைகள் உள்ளது. சம்பவம் நடந்த நேற்று தைப்பூச தரிசனத்தினை முடித்த அவர்கள் கோவிலில் சிறிது நேரம் செலவிட்டனர். அதன் பின்னர் கடைவீதியில் உள்ள கடைகளுக்கு குழந்தைகளை அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது கடைவீதியில், கோவிலுக்கு எதிரே இருந்த ஒரு ஐஸ் கிரீம் கடைக்கு அருகில் செல்லும் போது குழந்தைகள் தங்களுக்கு ஐஸ்கிரீம் வாங்கித் தருமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். உடனே தம்பதியினர் குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் வாங்கித் தந்துள்ளனர். 

 

அப்போது மூன்று குழந்தைகளும் ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிட தொடங்கியது. அதன் பின்னர் குழந்தை ராட்சன ஸ்ரீ சாப்பிட்டுக் கொண்டிருந்த ஐஸ்கிரீமில் உயிரிழந்த நிலையில் தவளை ஒன்று இருந்துள்ளது. உடனே குழந்தை ராட்சன ஸ்ரீ தனது பெற்றோரிடம் ஐஸ்கிரீமில் இருந்த தவளையைக் காட்ட, உடனே ஐஸ்கிரீமை கீழே போட்டு விட்டு, குழந்தைகள் மூவரையும் அருகில் இருந்த திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனைக்கு போகும் வழியில் குழந்தைகள் மூவரும் வாந்தி எடுக்கத் தொடங்கியதுடன் அடுத்தடுத்து மயங்கி விழுந்துள்ளனர். மருத்துவமனையை அடைந்ததும், மூவருக்கும் தீவிர சிகிச்சை அளித்துள்ளனர். மேலும் தொடர்ந்து குழந்தைகள் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.  திருப்பரங்குன்றம் கோயில் கடைவீதியில், மிகவும் சுகாதாரமற்ற முறையில் ஐஸ்கிரீம் தயாரித்து விற்பனை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.