சிவகங்கை மாவட்டத்தில் பல இடங்களில் போலி ஆதார் அட்டை தயார் செய்யப்படுவதாக தகவல் பரவுகிறது. எனவே இதனை உடனடியாக தடுக்க கணினி மையங்களில் ஆய்வு நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.

 

அத்தியாவசிய அட்டையாக இருப்பது ஆதார் அட்டை

 

நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் அத்தியாவசிய அட்டையாக இருப்பது ஆதார் அட்டை ஆகும். மத்தியில் பா.ஜ.க. அரசு ஆட்சிக்கு வந்த பிறகு நாட்டு மக்கள் அனைவருக்கும் ஆதார் கார்டை வழங்கி வருகிறது. வங்கி கணக்கு தொடங்க, சிலிண்டர் எரிவாயு இணைப்பு பெற, வாக்காளர் அடையாள அட்டை என அரசின் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சலுகைகளை பெறுவதற்கு ஆதார் அட்டை மிகவும் அவசியமாகிறது. இதில் சிறிய மாற்றம் செய்ய வேண்டும் என்றால் கூட மக்கள் வரிசையில் காத்திக் கிடக்கும் நிலை உள்ளது.

 

மீண்டும் தலை தூக்கும் போலி ஆதார்

 

இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களில் போலியான எண்கள், முகவரி உள்ளிட்ட முக்கிய விபரங்களை மாற்றிக் கொடுப்பதாக புகார் எழுந்துள்ளது. ஏற்கனவே சிவகங்கை மாவட்டத்தில் 2020-ம் ஆம் ஆண்டு இதே போல் 7 பெண் ஏஜேண்டுகள் மூலம் கணினி மையம் ஒன்று, போலி ஆதார் கார்டு தயாரிப்பதாக புகார் எழுந்த சூழலில் அப்போதைய மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் நடவடிக்கை எடுத்து கட்டுக்குள் கொண்டுவந்தார். இந்த சூழலில் தற்போது மீண்டும் போலி ஆதார் கார்டு தயாரிக்கும் தொழில் தலை தூக்கியுள்ளதாக புகார் வாசிக்கப்படுகிறது.

 

போலி ஆதார் மூலம் மைக்ரோ பைனான்ஸ்

 

இதுகுறித்து மானமதுரை பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் நம்மிடம் தெரிவிக்கையில்..,” வரலாற்று நகரமான எங்கள் மாவட்டம் சிவகங்கையில் போலி ஆதார் கார்டு தயாரிக்கும் தொழில் மீண்டும் தலை தூக்கியுள்ளது, வேதனை அளிக்கிறது. பெண் ஏஜெண்டுகள் மூலம் இவ்வாறு போலி ஆதார் கார்டு, வாக்களர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை தயார் செய்து, மைக்ரோ பைனான்ஸ் உள்ளி தனியார் நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் கூட லோன் பெற்று வருகின்றனர். ஏற்கனவே லோன் வாங்கி கட்டவில்லை என்றால் மீண்டும் லோன் வாங்குவது சிரமம். இதனால், போலி ஆதார் எண் மற்றும் முகவரிகளை மாற்றி லோன்களை பெற்று வருகின்றனர்.

 

போலி ஆவணங்கள் தயாரிப்பை நிறுத்த வேண்டும்

 

குறிப்பாக சிவகங்கை நகர் காவல்நிலையம் அருகே உள்ள பெருமாள் கோயில் தெருவில் செயல்படும் தனியார் இ-சேவை மையத்தில் இது போன்ற சட்ட விரோத செயல்கள் நடைபெற்று வருகிறது. சம்மந்தப்பட்ட கணினி மைய உரிமையாளரிடம் இரண்டு இணைய சென்டர்கள் உள்ளது. இதை மையமாக வைத்துக் கொண்டு காஞ்சிரங்கால் பகுதியைச் சேர்ந்த பெண் ஏஜெண்டுகள் மூலம் கார்டு ஒன்றிற்கு 2 ஆயிரம் ரூபாய் வசூல் செய்து போலி ஆதார் எண்ணுடன் கூடிய ஆதார் அடையாள அட்டை தயார் செய்து கொடுக்கின்றனர். அதே போல வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை போலியாக தயார் செய்து வருகின்றனர். கடந்த ஓர் ஆண்டுகளாக இந்த தொடர் குற்றசம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே குறிப்பிட்ட தனியார் இ-சேவை மையங்களில் ரகசியமாக கண்காணித்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டனர்.

 

இந்திய அரசின் கீழ் அடையாள அட்டையாக வழங்கப்படும் ஆதார் கார்டிலும் முறைகேடு நடக்கிறதா? என்று கேட்கும் போதே அதிர்ச்சியாக உள்ளது. எனவே இதனை கண்காணித்து, தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில் கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.