தமிழ்நாடு கூட்டுறவுத்துறையின் கீழ் வேலை வாய்ப்பு

 

கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள விற்பனையாளர்கள் (salesman), கட்டுநர்கள் ( packer) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2000 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கூட்டுறவுத்துறையின் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. எந்தவித எழுத்துத் தேர்வும் இல்லாமால், நேரடி நியமன நடைமுறையின் மூலம் பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. சென்னையில் மட்டும் மொத்தம் 348 காலிப்பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட உள்ளது. அதே போல் மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

மதுரை மாவட்ட செய்திக் குறிப்பு

 






மதுரை - கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் மதுரை மாவட்டத்தில் செயல்படும் பல்வேறு வகையான கூட்டுறவுச் சங்கங்களில் உத்தேசமாக காலியாகவுள்ள 88 விற்பனையாளர் மற்றும் 18 கட்டுநர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் https://drbmadurai.net என்ற இணையதளம் வழியாக (through Online Only) மட்டுமே 07.11.2024 அன்று பிற்பகல் 5.45 மணிவரை வரவேற்கப்படுகின்றன. இத்தேர்வுக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, இடஒதுக்கீடு, விண்ணப்பக் கட்டணம் மற்றும் விண்ணப்பித்தல் தொடர்பான விவரங்களுக்கு www.drbmadurai.net என்ற இணையதளத்தைக் காணவும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நேரடி நியமனத்திற்கு எதிர்ப்பு

 

இந்நிலையில் நேரடி நியமனம் என்பது வெளிப்படை தன்மையில்லாமல் தேர்வு செய்யப்படும் முறை. எனவே, நேரடி நியமனம் செய்யும் முறையை உடனடியாக கைவிட வேண்டும். மாற்றாக தேர்வாணையம் அல்லது வேலை வாய்ப்புத்துறை மூலம் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

 

நேரடி பணி நியமனம் வேண்டாம்

 

இது குறித்து மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான மேலூர் பா.ஸ்டாலில் கூறுகையில்...,” அரசு சார்ந்த ஒவ்வொரு பணியாளர்களும் எழுத்து தேர்வு முறையிலும், வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமும் அதிகளவு ஆட் சேர்ப்பு செய்யப்படுகிறது. நீதிமன்றத்திற்கு கீழ் எடுக்கப்படும் கடை நிலை ஊழியர்களுக்கு கூட பல்வேறு கட்ட தேர்வு நடத்தப்படுகிறது. இதனால் படித்த மாணவர்கள் அனைவரும் போட்டித் தேர்வை நோக்கி நகர்ந்து, தங்களது அறிவை விசாலப்படுத்திக் கொள்கின்றனர். இந்த சூழலில் கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் ரேஷன் கடைகளுக்கு விற்பனையாளர்கள், கட்டுநர்கள் நேரடி நியமனம் மூலம் பணியாளர் தேர்வு செய்யப்படுதாக அறிவிப்பு வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

 

தமிழ்நாடு முதல்வர் தலையிட வேண்டும்

 

ஏனெனில் தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் தொடர்ந்து லஞ்சம் என்ற நோய் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இப்படி இருக்க நேரடி நியமனம் என்பது முறைகேடிற்கு வழி வகுக்கும், வெளிப்படை தன்மையில்லாமல் போகும். கண்துடைப்பிற்காக நடத்தப்பட்டு, அரசியல் பிரமுகர்களின் உறவினர்களும், அதிகளவு பணம் கொடுக்கும் நபர்களுக்கே இந்த பணி நியமனம் என்பது சேரும். ரேஷன் கடை பணியில் பணம் கொடுத்து சேரும் நபர்கள் சட்ட விரோதமாக பணம் ஈட்டவே முயற்சிப்பார்கள். ரேஷன் கடை என்பது அதிகளவு ஏழை, எளிய நபர்கள் பயன்பெறும் இடமாகும். எனவே தமிழ்நாடு முதல்வர் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இதில் தலையிட்டு நேரடி நியமனத்தை உடனடியாக ரத்து செய்துவிட்டு, தேர்வு முறை அல்லது வேலைவாய்ப்பு அலுவலகம் கீழ் முறையாக பின்பற்றி பணிநியமனம் வழங்க உத்தரவிட வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.