திருமணங்கள் மட்டுமல்ல, திருமண கவனிப்புகளும் வித்தியசமாக மாறிவிட்டது. ஆடம்பரங்களை அள்ளித்தெளித்து வருவோரை வாய் பிளக்க வைக்கும் திருமண யுக்தியாக, சிவகங்கை மாவட்டத்தில் புதிய யுக்தியை மணவீட்டார் மேற்கொண்டனர்.




திருமணத்திற்கு வருவோருக்கு தாம்புழ பை, பரிசுகள், பழங்கள், ஏன்... சில நேரங்களில் மரக்கன்றுகள் கூட வழங்கி பார்த்திருப்போம். இவர்கள், வருவோருக்கு தலா ஒரு குவாட்டம் வழங்கப்படும் என அறிவித்து, அதை அமல்படுத்தவும் செய்தனர். ப்ளக்ஸ் போர்டில் பகிரங்கமாக அறிவித்து, குவாட்டரும், சிக்கனும் திருமணத்தில் பங்கேற்றவர்களுக்கு வழங்கப்பட்டது. 


இதில் இன்னொரு கூத்தும் இருந்தது. திருமணம் ஆனவர்களுக்கு ஒரு குவாட்டரும், சிக்கனும் இலவசம். திருமணம் ஆகாதவர்களுக்கு இரு குவாட்டர் மற்றும் சிக்கன் வழங்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம் மேள வெள்ளஞ்சி  கிராமத்தில் நடந்த ஜெயமுத்து-சரண்யா திருமணம் தான், இந்த விசித்திர உபசரிப்பால் உச்சபட்ச பேச்சாக உள்ளது. சரி... கல்யாணம் ஆனவர், ஆகாதவர் எப்படி கண்டுபிடிப்பீங்கன்னு கேட்டா... அதற்கு தான் ஆதார் கார்டு கட்டாயமாம்! 




ஆதார் கார்டு இருந்தால் தான் குவாட்டர். அதில் உள்ள வயதை வைத்தும், அடையாளத்தை வைத்தும் திருமணம் ஆனவர், ஆகாதவர் என்பதை கண்டுபிடித்து அதன் அடிப்படையில் மது வினியோகம் நடந்துள்ளது. இதில் இன்னொரு ஆஃபரும் இருந்தது. சிலர் பீர் விரும்புவார்கள் என்பதால் , குவாட்டருக்கு பதில் பீரும் வழங்கப்பட்டது. இதை விட மனமகிழ்ச்சி என்ன இருக்கிறது என்பதைப் போல, ஊரிலிருந்த அனைவரும் திருமணத்தில் ஆஜராகிவிட்டனர். குறிப்பாக, ஆண் மகன்கள் அனைவரும் ஆஜர். 


இதில் உள்ளூர் வாசிகள் கெடுபிடி தர, ‛சரிப்பா... உள்ளூருக்கு ஒரு ஆஃபர் தருகிறோம்...’ என்று, திருமணம் ஆன உள்ளூர்வாசிகளுக்கும் பின்னர் இரு குவாட்டர்கள் வழங்கப்பட்டதாம். ஆனால், ஆதார் கட்டாயம் என்கிற விதிமுறையில், எந்த காரணம் கொண்டும் தளர்வு செய்யவில்லையாம். அது ஏன் திருமணம் ஆனவர்களுக்கு ஒரு குவாட்டர் என்று விழா ஏற்பாட்டாளர்களிடம் கேட்ட போது, ‛‛திருமணம் ஆனவர்களுக்கு பொறுப்பு அதிகம். அவர்கள் பத்திரமாக வீட்டிற்கு செல்ல வேண்டும் என்பதால், ஒரு குவாட்டரோடு நிறுத்தி விட்டோம்; அதே நேரத்தில் உள்ளூர் வாசிகள் வெளியே செல்ல மாட்டார்கள், திருமணம் ஆகாதவர்கள் கொஞ்சம் ஓய்வெடுத்து செல்லலாம், என்பதால் அவர்களுக்கு இரு குவாட்டர் தந்தோம். அது மட்டுமல்லாமல் இன்று விசேஷங்களில் மதுபானம் தவிர்க்க முடியாததாகிவிட்டது. 





சிவங்கை அல்லது மானாமதுரை சென்று தான் நிகழ்ச்சிக்கு வருபவர்கள் மதுபானம் வாங்க வேண்டியுள்ளது. அது அவர்களுக்கு அலைச்சல் தரும். நாமே அந்த ஏற்பாடு செய்து தரும் போது, அவர்கள் அலைச்சல் தீரும், மனமகிழ்ச்சியோடு அவர்களும் பருகி செல்வார்கள் என்பதால் எந்த ஏற்பாடு செய்தோம்,’’ என்று கூறினார்கள். 


இந்த விபரம் அறிந்து, திருமணத்தில் பங்கேற்க விருப்பம் இல்லாமல் இருந்தவர்கள் கூட, உடனே ஊர் திரும்பி திருமணத்தை சிறப்பித்துள்ளனர். ‛எல்லா வீட்டு விசேஷத்திலும் இது மாதிரி ஏற்பாடு செய்தால், எழுதுற மொய்க்கு பிரயோஜனமா இருக்கும்,’ என சிலாகிக்கின்றனர் குடிமகன்கள்!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண


 


 


 


 


வைத்து உள்ளனர்