வள்ளியூர் நீதிமன்ற அரசு வழக்கறிஞர் நியமனம் குறித்து ஆறு வாரத்தில் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.


திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரை சேர்ந்தவர் ஜெகதீஸ் ராஜன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு அரசு வழக்கறிஞராக முத்துகிருஷ்ணன் என்பவரை கடந்த நவம்பர் 2021 ஆம் ஆண்டு அரசு நியமனம் செய்தது. இவரது நியமனத்தின் முறையான தகுதிகளை கடைபிடிக்கவில்லை.  எனவே இவரது பணி ரத்து செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.


இந்த மனு நீதிபதி ரமேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரனை செய்த நீதிபதி பணி நியமனம் குறித்து உடனடியாக புகார் வந்துள்ளது. ஆனால் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.


ஒரு பணி நியமனம் குறித்து புகார் பெறப்பட்டால் புகாரின் அடிப்படையில் சட்டத்திற்கு உட்பட்டு விசாரணை மேற்கொண்டு அதில் ஒரு முடிவு காணப்பட வேண்டும் அவ்வாறு இல்லாமல் பெறப்பட்ட புகாரை நீண்ட நாட்கள் நிலுவையில் வைத்திருக்கக் கூடாது இவ்வாறு நிலுவையில் வைத்திருப்பது அதிகாரிகள் தன் கடமையை செய்ய தவறுவதாக கருதப்படும் இதனாலையே நீதிமன்றத்திற்கு இது போன்ற வழக்குகள் வருகிறது என தெரிவித்து,


அரசு வழக்கறிஞர் நியமனம் குறித்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் சட்டத்திற்கு உட்பட்டு விசாரணை நடத்தி ஆறு வாரத்தில் முடிவெடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.


 




மற்றொரு வழக்கு


நில கையகப்படுத்துதல் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரிய . வழக்கை தள்ளுபடி செய்தும் இதனோடு தொடர்புடைய வழக்குகளை முடித்து வைத்தும் உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.


தூத்துக்குடியைச் சேர்ந்த திருமணி தர்மராஜ் பட்டுத்துறை அருள்வேல் கணேசன் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நில கையகப்படுத்துதல் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவும் அது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட அரசிதலில் வெளியிடப்பட்ட அறிவிப்பை ரத்து செய்யக் கோரியும் மனு தாக்கல் செய்திருந்தனர்.


இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தமிழக அரசு வெள்ள நீரை ஆக்கப்பூர்வமாக கையாளும் விதமாக கண்ணடியான் கால்வாய் வழியாக தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு ஆகிய ஆறுகளை இணைத்து வறட்சி மிகுந்த சாத்தான்குளம், திசையன்விளை உள்ளிட்ட கிராமங்களுக்கு தண்ணீரை கொண்டு சென்று விவசாயத்திற்கு பயன்படுத்தும் விதமாக திட்டத்தை கொண்டு வந்தது இதற்காக அப்பகுதி மக்களின் நிலங்கள் அரசு விதிப்படி கையகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பான அறிவிப்பு முறையாக அரசிதலில் வெளியிடப்படவில்லை மற்றும் மாற்று வழி குறித்தும் பரிசீலிக்கப்படவில்லை ஆகிய இரு காரணங்களை குறிப்பிட்டு நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக அறிவிப்பை ரத்து செய்யுமாறு மனுதாரர்கள் தரப்பில் கோரப்பட்டுள்ளது.


அரசு தரப்பில் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான அறிவிப்பு தூத்துக்குடி மாவட்ட அரசிதலில் கடந்த 2020 டிசம்பர் 8ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட அரசு இதழ்களும் தமிழக அரசின் வரம்புக்குட்பட்டது. அதேபோல நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டால் அருகில் இருக்கும் வனத்துறைக்கு சொந்தமான இடத்தை மாற்றிடமாக பரிசீலித்துள்ளனர். ஆனால் அவ்வழி பொருத்தமானதாக அமையாது இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ள நிலையில் மனுதாரர்கள் தங்களது நிலத்தை வழங்காத காரணத்தினாலேயே அதை கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆகவே இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரர்கள் தரப்பில் முன் வைக்கப்படும் வாதங்கள் ஏற்கத்தக்கதாக அல்ல எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தும் இதனோடு தொடர்புடைய வழக்குகளை முடித்து வைத்தும் உத்தரவிட்டார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண