100 வார்டுகளை கொண்ட மதுரை மாநகராட்சியில் தனித் தனி மண்டலங்கள் பிரிக்கப்பட்டு நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது.  திருப்பரங்குன்றம் மேற்கு மண்டலத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம்  மேயர் இந்திராணி தலைமையில் நடைபெற்றது. மதுரை மாநகராட்சி ஆணையர் சிம்ரன் சித் சின்ஹா, மண்டல தலைவர் சுவிதா விமல் மற்றும் மதுரை மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.



இதில் பொதுமக்கள் பல்வேறு மனுக்களை அளித்தனர் பட்டா சிட்டா அடங்கள் உள்ளிட்ட தங்களது பிரச்னைகளையும்., பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்றும் ஒரு சில புகார் அளித்தனர். குறிப்பாக தங்களது பகுதிக்கு மூன்று ஆண்டுகளாக கொசு மருந்து அடிக்கவில்லை, தெருவிளக்கு சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என்றும் புகார் அளித்தனர்.



தொடர்ந்து., 97-வது வார்டு மனை முறையறை திட்டத்தில் விண்ணப்பித்த முத்துவேல் என்பவர் மேயர் இந்திராணியிடம் துணை மேயர் நாகராஜன் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து மனை முறையறையை நிறுத்தி வைத்துள்ளதாக புகார் அளித்தார். இதுகுறித்து பல்வேறு முறை நேரில் சந்தித்து கேட்டபோதும் மாநகராட்சி அதிகாரிகள் அனுமதி வழங்க துணை மேயர் நாகராஜன் தடையாக உள்ளார் எனவே இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். அப்போது அதிகாரிகள் முன்னிலையில் மனு கொடுத்த முத்துவேல் மீது வழக்கு தொடருவேன், என்னிடம் கேட்காமல் அதிகாரிகள் விசாரணை செய்யகூடாது என மிரட்டும் பாணியில் துணை மேயர் பேசியதால் பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. 



மேலும்., 91 வது வார்டு மாநகராட்சி கவுன்சிலர் வாசு என்பவர் தங்களது பகுதி மக்களின் சார்பில் குடிநீர் நீர்த்தேக்க தொட்டி பழுதடைந்து இருப்பதாகவும்., போர்வெல் மோட்டார் சரி செய்து தர வேண்டும் என்று கோரிக்கை மனுவை மேயரிடம் அளித்தார்.