தேனி மாவட்டத்தில் அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட 33 வார்டுகள் உள்ளது. இந்த நகராட்சிக்கான நகர்மன்ற தலைவர் பதவியை திமுக கைப்பற்றியது. கடந்த உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி கட்சிக்கு நகர்மன்றத் தலைவர் பதவிக்கு தேனி அல்லிநகரம் நகராட்சி காங்கிரஸ் கட்சிக்கு ஒடுக்கப்பட்டது. இந்த நிலையில் நகர்மன்றத் தலைவர் பதவியை திமுக கைப்பற்றியது. அல்லிநகரம் நகராட்சியை பொறுத்தவரை அதிமுக 7 வார்டுகளிலும், காங்கிரஸ் 2 வார்டுகளிலும், அமமுக 2 வார்டுகளிலும், சுயேச்சை 2 இடங்களிலும், பாஜக 1 வார்டிலும், வெற்றி பெற்றது.
இந்த சூழலில் நகர்மன்ற தலைவர் பதவி கூட்டணி கட்சியான காங்கிரஸிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் தலைமையின் அறிவிப்பை மீறி திமுக கவுன்சிலர் ரேனுபிரியா நின்று வெற்றி பெற்றார். இது போன்ற செயல்பாடு பல்வேறு மாவட்டங்களிலும் நடந்தது. கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை திமுக கைப்பற்றியது குறித்து தலைமைக்கு புகார் எழுந்து வந்த நிலையில் திமுக தலைமைக்கு மிகவும் நெருக்கடியாக மாறியது. உடனே கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். ஒதுக்கப்பட்ட இடத்தை கூட்டணி கட்சிக்கு கொடுக்க வேண்டுமென திமுக தலைமை உத்தரவிட்டதை அடுத்து,
தேனியில் மட்டும் திமுக நகர் மன்ற தலைவர் பதவியில் திமுக தொடர்ந்து வந்தது. கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுவினர் கைப்பற்றியது குறித்து பல்வேறு மாவட்டங்களில் திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கபட்டது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் தேனி திமுகவிற்கு பெரிதும் உழைத்தவர் என்பதால் ரேணுபிரியா மற்றும் அவரது கணவர் மீது திமுக தலைமை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் தொடர்ந்து வந்ததும் கூட்டணி கட்சிக்கும் திமுகவிற்கும் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தியது. சமீபத்தில் தேனி அல்லிநகரம் நகராட்சியில் முதல் நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது.
இதில் ஆளும் கட்சியைச் சேர்ந்த திமுக கவுன்சிலர்கள் கூட்டத்தில் பங்கேற்காதது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் 29வது வார்டை சேர்ந்த திமுக கவுன்சிலர் சந்திரகலா ஈஸ்வவரி நகர்மன்ற தலைவர் ரேணுபிரியாவும் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரல் ஆகி வருவது தேனி மாவட்ட திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆடியோவில் ஏற்கனவே பேசியபடி தங்களுக்கு சேர வேண்டிய பணத்தை கொடுக்க வேண்டும். இதுவரை பேசிய பணம் வரவில்லை எனவும், பணம் வரும் வரை கூட்டத்தில் பங்கேற்பதில்லை என அனைத்து கவுன்சிலர்களும் முடிவு செய்திருப்பதாக சந்திரகலா ஈஸ்வரி கூறுகிறார். மேலும் தேர்தலுக்கு முன்பே ஐந்து லட்சம் ரூபாயை கொடுப்பதற்காக கூறியதும் கொடுக்கவில்லை.
கமிஷன் பர்சன்டேஜ் பிரிப்பது குறித்து முடிவெடுக்க வேண்டும் 32வது வார்டு திமுக கவுன்சிலர் செல்வம் எங்களுக்கு சேர வேண்டிய பணத்தை கொடுப்பதாக கூறி விட்டார். என்றும் அதற்கு பதிலளிக்கும் தலைவர் ரேணுபிரியா மொத்த பணமும் தேர்தலுக்கு முன்பே மாவட்ட செயலாளரிடம் கொடுக்கப் பட்டு விட்டதாகவும்,துணைத்தலைவர் முடிவு செய்யப்பட்ட பிறகு நாங்கள் தர வேண்டிய பணத்தை தருகிறோம் என சொல்லி இருந்தோம். பழைய டெண்டர்களுக்கு கமிஷன் கொடுக்க முடியாது. தேர்தலின் போது எல்லோருக்கும் சேர்த்து கோடிக்கணக்கில் செலவு செய்து இருக்கிறோம். ஆனால் எங்களின் பதவியே உறுதி இல்லாமல் இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.
தேனி அல்லிநகரம் நகராட்சி கடந்த சில ஆண்டுகளாக கவுன்சிலர்கள் இல்லாததால் இன்றுவரையில் திட்ட பணிகள் முடங்கி இருந்தன. தற்போது தேர்தல் நடந்து புதிய உறுப்பினர்கள் பதவியேற்ற நிலையில் இனியாவது நலத்திட்ட உதவிகள் கிடைக்கும் நகராட்சியில் வளர்ச்சிப்பணிகள் செயல்படுத்தப்படும் என்று மக்கள் எதிர்பார்த்து வரும் நிலையில் இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருவது தேனி அல்லிநகரம் நகராட்சி பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்