சித்திரை மாதம் பிறந்து விட்டாலே பல ஊர்களில் திருவிழாக்கள் களைகட்டத் தொடங்கிவிடும். குறிப்பாக, மதுரையில் நடக்கும் சித்திரை திருவிழா வந்துவிட்டாலே ஒட்டுமொத்த தென்மாவட்டங்களும் விழாக்கோலமாக காட்சி தரும்.
சித்திரை திருவிழா:
சித்திரை திருவிழாவை முன்னிட்டு, கடந்த 12ம் தேதி மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கொடியேற்றப்பட்டது. இதையடுத்து, ஒவ்வொரு நாளும் சித்திரை திருவிழாவிற்கான சிறப்பு பூஜைகளும், அலங்காரமும் கோயிலில் நடைபெற்று வருகிறது.
புகழ்பெற்ற கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபோகம் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து பக்தர்கள் தங்களது குழந்தைகளுக்கு கருப்பசாமி, மீனாட்சியம்மன், சொக்கநாதர் வேடமிட்டு அழைத்து வருகின்றனர்.
புட்டிப்பால் குடித்து வந்த கருப்பசாமி:
இந்த நிலையில், கருப்பசாமி வேடமிட்ட சிறு குழந்தை பால் குடித்துக் கொண்டே கையில் அரிவாளுடன் வந்த வீடியோ இணையத்தில் வைலராகி வருகிறது. அந்த வீடியோவில் சுமார் 2 வயதுள்ள குழந்தை ஒன்றை அதன் தந்தை தோளில் தூக்கி உலா வருகிறார். அந்த குழந்தைக்கு கருப்பசாமி வேடமிடப்பட்டுள்ளது.
அந்த குழந்தை ஒரு கையில் கருப்பசாமியை போல பொம்மை அரிவாள் ஒன்றை வைத்துள்ளது. மற்றொரு கையில் புட்டியில் உள்ள பாலை குடித்துக் கொண்டே வருகிறது. கருப்பசாமி என்றாலே மிகவும் ஆக்ரோஷமான ஊரை காக்கும் காவல் தெய்வமாக பக்தர்களால் கருதப்படுகிறார். இந்த குழந்தை கருப்பசாமி புட்டியில் பால் குடித்தவாறு வீதி உலா வந்தது பக்தர்களின் மனதை கவர்ந்தது.
இந்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பயனர் ஒருவர், “எனக்கும் பசிக்கும்ல.. பால் குடிச்சுட்டு அருவா எடுக்குறே” என்று பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கள்ளழகர் வரும் 23ம் தேதி வைகை ஆற்றில் இறங்கும் வைபோகத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரையில் குவிவார்கள். இதனால் தற்போது முதலே பாதுகாப்பு ஏற்பாடுகள் படு தீவிரமாக மதுரை முழுவதும் போடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: புகழ்பெற்ற கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபோகம்! மதுரைக்கு உள்ளூர் விடுமுறை - எப்போது?
மேலும் படிக்க: கள்ளழகர் மீது உயர் அழுத்த மோட்டார் வைத்து தண்ணீர் பீய்ச்சி அடிக்க கட்டுப்பாடு - மதுரை உயர்நீதிமன்றம்