தனியார் ரிசார்ட்டுகளில் வணிக நோக்கில் செயற்கை நீர்வீழ்ச்சிகள் உருவாக்கியது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதோடு, சம்பந்தப்பட்ட ரிசார்ட்டுகளுக்கு சீல் வைக்க வேண்டும் என  உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

 

மேற்கு தொடர்ச்சி மலையில்  உருவாகும் அருவிகளின் இயற்கை நீரோட்டத்தை மாற்றி செயற்கை நீர்வீழ்ச்சிகளை உருவாக்கும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்த வினோத் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினை தாக்கல் செய்திருந்தார். அதில், "நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றாலம் அருவி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து உருவாகிறது. கடந்த 2019 தென்காசி மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்டது.

 

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் ஏராளமான அருவிகள் இயற்கையாக உருவாகின்றன. நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஐந்தருவி, குற்றாலம் அருவி உள்ளிட்ட இயற்கை அருவிகள் உள்ளன. பொருளாதார ரீதியாக வசதி மிக்க சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்கில், ஏராளமான ரிசார்டுகள் தனியார் நீர்வீழ்ச்சிகளை உருவாக்கி, அவற்றை இணையதளங்களில் விளம்பரப்படுத்துகின்றனர். இதற்காக இயற்கையான அருவிகளின் நீர் வழி பாதையை மாற்றுகின்றனர். இதனால் இயற்கை சமநிலை பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. ஆகவே மேற்கு தொடர்ச்சி மலையில்  உருவாகும் அருவிகளின் இயற்கை நீரோட்டத்தை மாற்றி தென்காசி மாவட்டத்தில் செயற்கை நீர்வீழ்ச்சிகளை உருவாக்கும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.

 

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், செயற்கை நீர்வீழ்ச்சிகள் தொடர்பான புகைப்படங்கள், இணையதள முகவரிகள் ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

 

இதையடுத்து நீதிபதிகள், 

 

* இயற்கை அருவிகளின், நீரோட்டத்தை மாற்றி செயற்கை நீர்வீழ்ச்சிகளை உருவாக்குவது முற்றிலும் சட்டவிரோதமானது. 

 

* 2 நாட்களுக்காக தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோயமுத்தூர், ஊட்டி ஆகிய மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்க வேண்டும். 

 

* இக்குழு ஆய்வில் செயற்கை நீர்வீழ்ச்சிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதோடு, சம்பந்தப்பட்ட ரிசார்ட்டுகளுக்கு சீல் வைக்க வேண்டும் 

 

மேலும் இக்குழு செயற்கை நீர்வீழ்ச்சி தொடர்பான அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.