மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் பகுதியில் 12 ஆண்டுகளுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் சுங்கச்சாவடி ஒன்று தொடங்கப்பட்டது. அப்போது இருந்தே சுங்கசாவடியில் உள்ளூர் வாகனங்கள், அரசு பேருந்துகள், பள்ளி வாகனங்கள் சென்றுவர கட்டணம் வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்திவருகின்றனர்.
இந்நிலையில் திருமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த வணிகர்கள் ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்ட கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
இதன் எதிரொலியாக கப்பலூர் சுங்க சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் ஆகியோர் தலைமையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மூர்த்தி,”மதுரை கப்பலூர் சுங்க சாவடியில் பழைய நடைமுறையே தொடரும், கடந்த நாட்களால் திருமங்கலம் சுற்றுவட்டார மக்கள் எப்படி சென்று வந்துள்ளார்களோ அதே நடைமுறையை பின்பற்ற வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது" என்றார். மேலும், கப்பலுர் சுங்க சாவடியில் இனி உள்ளூர் மக்களின் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது எனவும், உள்ளூர் மக்களை கட்டணமின்றி அனுமதிக்க வேண்டும் என்ற எங்களுடைய கோரிக்கையை தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்