தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மகளிர் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளின் முன்பாக காவலர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த கோரிய வழக்கில், தமிழக உள்துறை செயலாளர் மற்றும் தமிழக காவல்துறை தலைவர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த விக்டோரியா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கினை தாக்கல் செய்திருந்தார். அதில் " மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக அரசு மகளிர் மீனாட்சி கலை கல்லூரி முன்பாக மாணவி ஒருவரின் தந்தையை இளைஞர்கள் தாக்கினர். இதன் காரணமாக கல்லூரி முடிந்து மாணவிகள் அச்ச உணர்வால் கல்லூரிக்குள் பதற்றத்துடன் செல்லும் வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது.
இதே போல் மதுரையில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரியிலும் இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் அத்துமீறி கல்லூரி வளாகத்திற்குள் சென்று மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டு அட்டகாசங்களில் ஈடுபட்டது போன்ற வீடியோக்களும் வேகமாக பரவியது.
இதன் காரணமாக மகளிர் கல்லூரிகளில் படிக்கக்கூடிய பெண்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக உள்ளது. மத்திய அரசு சார்பில் நிர்பயா திட்டத்தின் கீழ் பெண்களின் பாதுகாப்பிற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் நிதி ஒதுக்கப்படுகின்றன.
இந்த திட்டமானது 8 மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால் தற்பொழுது வரை தமிழகத்தில் உள்ள எந்த கல்லூரி மற்றும் பள்ளிகளிலும் எந்த விதமான பாதுகாப்பு ஏற்பாடும் செய்யப்படவில்லை.
தொடர்ச்சியாக பெண்களை அச்சுறுத்தும் விதமாக கல்லூரி வாசல்களில் நிகழும் சம்பவங்களை தடுப்பதற்காகவும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளின் வாசலில் நிரந்தரமாக காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும். இதுகுறித்து மனு அளித்து எந்த விதவிதமான நடவடிக்கையும் இல்லை, எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உத்தரவிட வேண்டும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கானது நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்யநாராயண பிரசாத் வரும் முன்பாக விசாரணைக்கு வந்தது.
மாணவிகளின் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமானது. மாணவிகளை பாதுகாப்பதற்காக எந்த மாதிரியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து பாதுகாப்பு பணிகளுக்கு 10அடிக்கு ஒரு காவலரை நிறுத்தி வைக்கும் காவல்துறை மகளிர் கல்லூரிகளில் பாதுகாப்புக்கு காவலர்களை நிறுத்தலாமே எனவும் கருத்து தெரிவித்தார்.
அரசு தரப்பில் மதுரையில் மகளிர் கல்லூரி முன்பாக நடந்த இரண்டு சம்பவங்களும் இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு சூழ்நிலையில் நிகழ்ந்தவை. இதுகுறித்து சம்மந்தப்பட்ட இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 15க்கும் மேற்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு முன்பாக காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என தகவல் அளிக்கப்பட்டது.
பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்து தமிழக உள்துறை செயலாளர் மற்றும் தமிழக காவல்துறை தலைவர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
மற்றொரு வழக்கு
சட்டவிரோதமாக கைது செய்த காவல்துறையினர் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க கோரி விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தாக்கல் செய்த வழக்கு குறித்து தமிழ்நாடு காவல்துறை தலைவர் திருச்சி மாநகர காவல் ஆணையர் ஆகியோர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
திருச்சியைச் சேர்ந்த அய்யாகண்ணு, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு. அதில், "தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தின் தலைவராக உள்ளேன். கடலூரில் உள்ள தனியார் சர்க்கரை ஆலை விவசாயிகளிடம் கொள்முதல் செய்ததற்கான கரும்புகளுக்கு உரிய தொகையை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர்.
விவசாயிகளுக்கு சேர வேண்டிய தொகையை வழங்க கோரி பல்வேறு போராட்டங்களில் நாங்கள் ஈடுபட்டு வந்தோம். ஆனால் அந்த தனியார் சர்க்கரை ஆலை சுமார் 7 ஆயிரம் விவசாயிகள் பெயரில் மோசடியாக கடன் பெற்றுள்ளது.
இதற்கிடையில், அந்த சர்க்கரை ஆலை நிறுவனம் திவாலானதாக அறிவிக்க நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு, அதன் பேரில் சர்க்கரை ஆலையின் சொத்துகளை ஏலம் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் கரும்பு விவசாயிகளுக்கு ஆதரவாக கடந்த மாதம் 17-ந் தேதி நடந்த கூட்டத்தில் நான் பங்கேற்பதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டேன். அப்போது என் வீட்டின் முன் வந்த ஓரையூர் போலீசார் என்னை தடுத்து கைது செய்தனர்.இதே போல எங்கள் சங்கத்தை சேர்ந்த 12 பேரையும் கைது செய்து ஒரு திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
போலீசாரின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது.எனவே, இதற்காக 10 லட்சம் ரூபாய் காவல்துறையினர் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பவானி சுப்பராயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், வழக்கு குறித்து தமிழ்நாடு காவல்துறை தலைவர் திருச்சி மாநகர காவல் ஆணையர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வருகிற 2-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.