ஸ்ரீவில்லிபுத்தூர், செண்பகத்தோப்பு வன பகுதியில் கல்யாண சுந்தரவல்லி, சௌந்தரவல்லி சமேத சுந்தரராஜப்பெருமாள் (எ) கட்டழகர் கோவிலுக்கு செல்ல வனத்துறையினரால் ரூ.20 வசூலிக்கப்படுவதற்கு தடைவிதிக்க கோரிய வழக்கில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர், விருதுநகர் வன காவலர் ஆகியோர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

 

விருதுநகரை சேர்ந்த ஆனந்தகுமார் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொது நல மனுவில், "விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், செண்பகத்தோப்பு வன பகுதியில் அருள்மிகு கல்யாண சுந்தரவல்லி, சௌந்தரவல்லி சமேத அருள்மிகு சுந்தரராஜப்பெருமாள் என்கிற கட்டழகர் கோவில் அமைந்துள்ளது.

இக்கோயில் மிக பிரசித்தி பெற்றது. புரட்டாசி மாதங்களில் இங்கு விழாக்கள் மற்றும் அன்னதானங்கள் நடைபெறும். இக்கோயிலுக்கு சென்று வர பல வருடங்களாக எந்த கட்டணமும் வசூல் செய்யப்படவில்லை.

ஆனால், தற்போது இக்கோயிலுக்கு செல்ல வனப்பகுதிகளில் நபர் ஒன்றுக்கு ரூ.20 வீதம் வனத்துறையினரால் வசூலிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

எனவே, ஸ்ரீவில்லிபுத்தூர், செண்பகத்தோப்பு வன பகுதியில் அருள்மிகு கல்யாண சுந்தரவல்லி, சௌந்தரவல்லி சமேத அருள்மிகு சுந்தரராஜப்பெருமாள் என்கிற கட்டழகர் கோவிலுக்கு செல்ல வனத்துறையினரால் ரூ.20 வசூலிக்கப்படுவதற்கு தடைவிதித்து உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.

 

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில், வனப்பகுதியை சுத்தம் செய்வதற்காகவே ரூ. 20 வசூல் செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், வனப் பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் தங்கள் பொறுப்புகளையும் கடமைகளையும் உணர்ந்து செயல்பட வேண்டும் என கருத்து தெரிவித்தனர். மனுதாரர் தரப்பில், அன்னதானம் சாப்பிட வரும் ஏழை பக்தர்களிடம் ரூ.20 வசூல் செய்கின்றனர். என தெரிவிக்கப்பட்டது.

 

இதனையடுத்து நீதிபதிகள்,  ரூ.20 இருந்தால் ஒரு நாள் முழுவதும் அம்மா உணவகத்தில் உணவருந்தி விடலாம். மேலும் வனப்பகுதியை சுத்தம் செய்ய தேவையான நிதியை அரசிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாமே என கருத்து தெரிவித்த நீதிபதிகள், வழக்கு குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர், விருதுநகர் வன காவலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை அக்டோபர் 13ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

 





 















மற்றொரு வழக்கு