சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் கடந்த 2019 ஆம் ஆண்டு உண்டியல் எண்ணும் பணி நடந்தது. அப்போது  பெண் ஊழியர்களுக்கான கழிப்பறையில் பேனா கேமரா மூலம் படம் பிடித்ததாக மதுரை மண்டல அறநிலையத்துறை இணை ஆணையர் பச்சையப்பன் மீது புகார் எழுந்தது. இதுகுறித்து சாப்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பச்சையப்பனை கைது செய்தனர். இந்த வழக்கில் பச்சையப்பன் பின்னர் ஜாமீன் பெற்றார். இந்த வழக்கின் விசாரணை பேரையூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.  கடந்த ஆண்டு இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்துள்ளனர்.

 

இந்நிலையில் பெண் ஊழியர் ஒருவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்,"பெண்களுக்கான கழிப்பறையில் பேனா கேமரா வைத்து படம் பிடித்தது தொடர்பான வழக்கில் போலீசார் புகார்தாரரிடம் வாக்குமூலம் பெறவில்லை.  குற்றப்பத்திரிக்கையில் பல உண்மைகள் இல்லை. எனவே இந்த வழக்கை மறு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்." என மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவின் ஏடிஎஸ்பி இந்த வழக்கை விசாரித்து இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

 



நெல்லை ரயில் நிலைய நடைபாதையில்  கிரானைட் கற்களை அகற்ற கோரிய வழக்கு -  தென்னக ரயில்வே பொது மேலாளர் பதில் தர  உத்தரவு

 

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த முகமது அய்யூப் தாக்கல் செய்த பொதுநல மனு,தென் தமிழகத்தில் திருநெல்வேலி ரயில் நிலையம் மிகவும் முக்கியமான சந்திப்பாகும். இந்த ரயில் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு அதிகப்படியாக ரயில்கள் இயக்கப்படுகிறது. இங்கு நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். திருநெல்வேலி ரயில் நிலையத்திற்கு விரைவு ரயில் மற்றும் பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த ரயில் நிலையத்தில் நடைபாதைகளில் கிரானைட் கற்கள் பதிக்கப்பட்டுள்ளது.இந்த கிரானைட் கற்கள் மழைகாலங்களில் அல்லது ரயில் நிலையத்தை சுத்தம் செய்யும்போது தண்ணீர் தேங்கி பயணிகள் வழுக்கி விழும் நிலை ஏற்படுகிறது.இதனால் குழந்தைகள் பெண்கள் மற்றும் முதியவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

 

எனவே திருநெல்வேலி ரயில் நிலையத்தில் நடைபாதைகளில் பதிக்கப்பட்டுள்ள கிரானைட் கற்களை அகற்றிவிட்டு, நடைபாதைகளில் நடக்கும்போது வழுக்காத வண்ணம் உள்ள சொரசொரப்பு கற்களை பாதிக்க உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என தனது மனுவில் கூறியிருந்தார்.இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது, அப்போது வழக்கு குறித்து தென்னக ரயில்வே பொது மேலாளர்  பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.