தமிழக-கேரள எல்லையை இணைக்கும் மாவட்டங்களில் முக்கியமாக பார்க்கப்படுவது தேனி மாவட்டம். கேரள மாநிலத்திற்கு செல்வதற்கு தேனி மாவட்டத்தில் இருந்து மூன்று மலைச்சாலை வழிகள் உள்ளது. போடி நாயக்கனூரில் இருந்து போடி மெட்டு வழியாகவும், கம்பத்தில் இருந்து  கம்பம் மெட்டு மலை வழியாகவும் குமுளி மலை வழி சாலை வழியாகவும் கேரளாவை அடைய முடியும்.

Continues below advertisement

இந்த நிலையில் கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்வதற்கு அதிகப்படியான வாகனங்கள் தேனி மாவட்டம் வழியாவே செல்கிறது. சபரிமலை ஐயப்பன் கோயில் அடுத்த மாதம்  மண்டல பூஜை நடைபெறுகிறது. இதையொட்டி தேனி மாவட்டம் கூடலூர் ,குமுளி வழியாக சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் வாகனங்கள் சென்று வந்த நிலையில் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Continues below advertisement

இந்த நிலையில், ஆந்திரா மாநிலம் சக்தி வேமூர்தடா அருகே உள்ள வாகைபாளையத்தைச் சேர்ந்தவர் நரேஷ்குர்லா(32), இவர் தனது தந்தை வேணு(55) மகன் சாதுர்யா(9). மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த முனி தேஜா(28) ஆகிய நான்கு பேரும் 2நாட்களுக்கு முன்பு சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு  காரில்  சென்றார். அங்கு சுவாமி தரிசனம் செய்து விட்டு அனைவரும் இன்று ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். காரை முனிதேஜா(28) என்பவர் ஓட்டினார். 

இந்நிலையில் இன்று மாலை பெரியகுளம்  அருகே உள்ள வடுகபட்டி புறவழிச்சாலை அருகே வந்த போது நிலைதடுமாறிய கார் சாலை ஓரத்தில் இருந்த தடுப்புச் சுவரில் கார் மோதி  பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அதே இடத்தில் நரேஷ்குர்லா பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த மற்றவர்கள் 108ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். ஆனால் செல்லும் வழியிலே வேணு உயிரிழந்தார். மேலும் காயமடைந்த முனிதேஜா தீவிர சிகிச்சையில் உள்ளனர். இதுகுறித்து பெரியகுளம் தென்கரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் தற்போது ஐயப்பன் கோயில் மற்றும் முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் மாலை அணிவித்து கோயிலுக்கு சென்று வருவதால் புறவழிச் சாலையில் அதிக அளவில் வாகனங்கள் மற்றும் பக்தர்கள் சென்று வருவதாலும் நெடுஞ்சாலைத்துறை சார்பாக சாலையில் இருபுறங்களும் விபத்து ஏற்படாமல் மின்விளக்குகள் அமைக்க வேண்டும் எனவும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கையும் வைத்துள்ளனர்.