மதுரை அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர் சச்சின் சிவா என்ற சிவக்குமார். இவர் இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்துவருகிறார். இவர் சென்னையில் இருந்து மதுரைக்கு வருவதற்காக நேற்று இரவு சென்னை கோயம்பேடு பேருந்து நிறுத்தத்தில் SETC க்கு சொந்தமான TN01 AN3213 என்ற பதிவெண் கொண்ட கழிப்பறை வசதியுடன் கூடிய பேருந்தில் பயணிப்பதற்காக ஏறியுள்ளார். அப்போது அந்த பேருந்தின் நடத்துனர் இந்த பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான அனுமதி இல்லை என கூறி பேருந்தில் ஏறக்கூடாது என கூறியுள்ளார். அப்போது பதிலளித்த சச்சின் சிவா இதுபோன்ற பேருந்துகளில் பயணிக்க அனுமதி உள்ளது, என கூறியபோது மாற்றுத்திறனாளி சிவாவை பார்த்து முகத்தை உடைத்துவிடுவேன் எனக்கு எல்லாம் தெரியும் என கூறி மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் இதுகுறித்து கேட்டபோது அப்படித்தான் பேசுவேன் உன்னை வண்டியில் ஏற்ற முடியாது எனக்கூறி வண்டியில் ஏற்றுவதற்கு மறுத்துள்ளார்.
இதனையடுத்து மாற்றுத்திறனாளி சச்சின் சிவா கோயம்பேடு பேருந்து நிறுத்தத்தில் அதே பேருந்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அந்த பகுதிக்கு வந்த நடத்துனர் நீ என்ன வேண்டுமானாலும் செய்து கொள் என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது என அலட்சியமாக பேசி மாற்றுத்திறனாளிக்கு மிரட்டல் விடுத்து சென்றுள்ளார். அந்த காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து மாற்றுத்திறனாளி சச்சின் சிவாவை பேருந்தில் ஏற்றாமலேயே அப்படி விட்டுசென்றுள்ளார். மேலும் காவல்துறையினர் முன்பாகவே நீ மதுரைக்கு வா பார்த்துக்கொள்ளலாம் என கூறி பகிரங்கமாக மிரட்டல் விடுத்துவிட்டு சென்றுள்ளார். இதனையடுத்து மற்றொரு பேருந்தில் மிகுந்த சிரமத்துடன் சச்சின் சிவா பயணித்துள்ளார்.
இந்நிலையில் சச்சின் சிவாவை பேருந்தில் ஏற விடாமல் அவதூறாக பேசிய நடத்துனர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் தனக்கு நடத்துனர் மிரட்டல் விடுத்ததால் உரிய பாதுகாப்பு கோரி மாநகர காவல் ஆணையரிடம் சச்சின் சிவா புகார் மனு அளித்தார். நடத்துனர் மூலம் எந்தவித அச்சுறுத்தலும் வராத வகையில் நடத்துனரை அழைத்து அறிவுரை வழங்கப்படும் என மாநகர காவல் ஆணையர் தெரிவித்ததாக சச்சின் சிவா கூறினார்.