மதுரை மேலூர் அருகே உள்ளது அரிட்டாபட்டி எனும் அழகிய கிராமம். ’ வாழும் மூதூர்’ என மதுரையை பெருமையாக பேசவைப்பதற்கு அரிட்டாபட்டியும் ஒன்று. சிதைந்து போகத மொழியும், கிராமமும், சுவையான தண்ணீரும், மண்வாசனையும், குன்றும் என பெருமையோடு நிமிர்ந்து நிற்கிறது. அரிட்டாபட்டி கிராமத்தில் ஏழு மலைகளை உள்ளடக்கிய பகுதியை பல்லுயிர் பாரம்பரிய தலமாக அறிவிக்க, கடந்த 2019-ல் நடவடிக்கை துவங்கியது.
கிராம ஊராட்சிகள், மாநில தொல்லியல் துறை, தமிழ்நாடு கனிம நிறுவனம் போன்ற பல துறைகளின் ஆலோசனைக்கு பின், இந்த முடிவு எடுக்கப்பட்டு கடந்த ஆண்டு முதல் பல்லுயிர் வாழும் மண்டலமாக தமிழ்நாடு அரசு அறிவித்து பாதுகாத்து வருகிறது. இந்நிலையில் அப்பகுதியில் கடந்த சில நாட்களாக சினிமா படப்பிடிப்புகள் அதிக ஒலி எழுப்பும் கருவிகளைக் கொண்டும் துப்பாக்கி சுடுதல் போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதால் மலையில் உள்ள பறவைகள் மற்றும் வனவிலங்குகள் பாதிக்கப்படுவதாக அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு படப்பிடிப்பை நிறுத்துவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலூர் அருகே அரிட்டாபட்டி கிராமத்தில் ஏழு மலைகளை உள்ளடக்கிய பகுதியில் அரிய வகை பறவைகள் மற்றும் வனவிலங்குகள் வசிப்பதாக சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில், அப்பகுதியை பல்லுயிர் வாழும் பாதுகாக்கப்பட்ட மண்டலமாக தமிழ்நாடு அரசு அரசாணை அறிவித்தது அதனை தொடர்ந்து பாதுகாக்கப்பட்டும் வருகிறது.
இந்நிலையில், தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் படப்பிடிப்பு அப்பகுதியில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. கூகைமலை பகுதியில் நடைபெற்று வரும் இந்த படப்பிடிப்பில் அதிக ஒலி எழுப்பக்கூடிய வெடிகளும் துப்பாக்கி சுடுதல் போன்ற காட்சிகளும் படமாக்கப்பட்ட வருவதால் கூகை, பருந்து போன்ற பறவை இனங்களும் மற்றும் சில வனவிலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டு அப்பகுதியை விட்டு வெளியேறி உள்ளதாக தெரிவித்தனர் அப்பகுதி இளைஞர்கள்.
எனவே மீதமிருக்கும் பறவைகளை காப்பாற்ற படப்பிடிப்பை உடனடியாக நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மே 22 சர்வதேச பல்லுயிர் பெருக்க நாளாக கொண்டாடி வரும் நிலையில், வனவிலங்குகள் மற்றும் பறவைகளை அச்சுறுத்தும் விதமாக படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருவது தங்களுக்கு மிகுந்த வேதனையாக உள்ளதாகவும் எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இப்பகுதியில் படப்பிடிப்பு நடைபெறுவதை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Captain Miller Update: ஃபர்ஸ்ட் லுக், டீசர் குறித்த அறிவிப்பு...வெளியான கேப்டன் மில்லர் அப்டேட் ...தனுஷ் ரசிகர்கள் உற்சாகம்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்