நடிகர் தனுஷ் திரைத்துறையில் 21 ஆண்டுகளை நிறைவு செய்ததை அவரது ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வரும் நிலையில், தனுஷ் ரசிகர்களை மேலும் குஷிப்படுத்தும் வகையில் கேப்டன் மில்லர் படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
ராக்கி, சாணி காயிதம் படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’.
மேலும், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தொடரி, மாறன், பட்டாஸ், படங்களைத் தொடர்ந்து 4வது முறையாக தனுஷ் நடிக்கிறார். பிரியங்கா மோகன் தனுஷுக்கு ஜோடியாக இந்தப் படத்தில் நடிக்கும் நிலையில், நடிகர் ஜி.வி.பிரகாஷ் இப்படத்துக்கு இசையமைக்கிறார். ஜெயிலர் படத்தின் வரிசையில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் கேப்டன் மில்லர் படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ் உள்ளிட்ட பல நடிகர்களும் முக்கியக் கதாபாத்திரங்களில் இப்படத்தில் நடித்து வரும் நிலையில், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் உருவாகி வருகிறது.
இதனிடையே தனுஷ் திரைத்துறையில் 21 ஆண்டுகளை நிறைவு செய்ததை தனுஷ் ரசிகர்கள் இன்று கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தனுஷ் ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தும் வகையில் கேப்டன் மில்லர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் ஜூன் மாதம் வருவதாகவும், படத்தின் டீசர் வரும் ஜூலை மாதம் வரும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
தனுஷின் முதல் படமான துள்ளுவதோ இளமை வெளியாகி 21 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராகவும், பன்மொழிக் கலைஞராகவும் தனுஷ் உயர்ந்துள்ளார்.
இதனை தனுஷ் ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வரும் நிலையில் அவர்களை மேலும் உற்சாகமூட்டும் வகையில் கேப்டன் மில்லர் படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் வரலாற்றுப் பின்னணியிலும், 1930களின் மெட்ராஸ் ப்ரெசிடென்சியை மையமாகக் கொண்டும் உருவாகி வருவதாகவும் கூறப்படுகிறது.
கேப்டன் மில்லர் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தென்காசி மாவட்டப் பகுதிகளில் கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில், மத்தளம்பாறை கிராமத்துக்கு அருகேயும் முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்கு அருகேயும் முறையான அனுமதியின்றி நடைபெற்று வந்ததாகக் கூறப்பட்டது.
மேலும் முறையான அனுமதியின்றி குண்டு வெடிப்பு காட்சிகள் உள்ளிட்டவை இங்கு படமாக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், இங்கு படப்பிடிப்பை நிறுத்த தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்தரன் உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து படக்குழுவினர் அனுமதி பெற்று சான்றிதழை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பித்த பின் மீண்டும் ஷூட்டிங் தொடங்கியது.
மேலும் கேப்டன் மில்லர் படப்பிடிப்பு நீர்நிலைகளை ஆக்கிரமித்து நடத்தப்பட்டதாகவும் முன்னதாகத் தகவல் வெளியான நிலையில், இது பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டு, தவறு இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்திருந்தார்.