மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் விஜய் டிவி, சன் டிவி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் போன்ற பொழுதுபோக்கு சேனல்கள், கார்ட்டூன் நெட்வொர்க், போகோ, டிஸ்கவரி போன்ற சிறுவர்கள் பார்க்க கூடிய கட்டண சேனல்களின் விலையை உயர்த்திக் கொள்ளலாம் என சேனல் முதலாளிகளுக்கு அனுமதி வழங்கி உள்ளது.




இதனால் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அளித்துள்ள கட்டண உயர்வு அனுமதியை உடனடியாக ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் பொதுநலச் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடதக்கது. இந்நிலையில் மதுரையில் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.




கேபிள் ஆப்ரேட்டர்களுக்கான கட்டண உயர்வை கண்டித்து 200க்கும் மேற்பட்ட கேபிள் ஆபரேட்டர்கள் மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா பகுதியில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு கேபிள் டிவி உரிமையாளர்கள் மற்றும் நுகர்வோர் நலச்சங்கம் சார்பில் மத்திய அரசின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரையின் மூலம் கட்டண சேனல்கள் மற்றும் எம்எஸ்ஓ நிறுவனங்கள் மிகக்கடுமையான கட்டண உயர்வுக்கு அனுமதி தந்து பொதுமக்கள் மற்றும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மீது ஏப்ரல் மாதம் முதல் அமல்படுத்திய என்டிஒ 3 பரிந்துரையை மத்திய அரசின் தொலைத்தொடர்பு துறை ஒழுங்கு முறை ஆணையம் நிறுத்தக்கோரி உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் மத்திய அரசை கண்டித்தும், தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தை கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.