திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு புதுப்பட்டி செல்லும் சாலை பகுதியில் குடியிருந்து வரும்  அன்புச்செல்வன், வத்தலக்குண்டு பெரியகுளம் சாலையில் மூன்று  நட்சத்திர தங்கும் உணவு விடுதி நடத்தி வருகிறார். மேலும் பல்வேறு தொழில்களை இவர் செய்து வருகிறார். வத்தலகுண்டு பைபாஸ் சாலையில் கணவாய்பட்டி பிரிவு அருகே தினமும் காலையில் நடைபயிற்சி மேற்கொள்வதை அன்புச்செல்வன் வழக்கமாக கொண்டுள்ளார்.  அவ்வாறு நடை பயிற்சி மேற்கொண்டு வந்த போது அவரை வழிமறித்து வெள்ளை நிற கார் ஒன்று வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய 7 பேர் கொண்ட கும்பல் பின்னர் அவர்கள் நடை பயிற்சி மேற்கொண்டிருந்த அன்புச்செல்வனை காரில் கடத்தி அங்கிருந்து மதுரையை நோக்கி சென்றுள்ளனர்.




நடைபயிற்சி சென்ற அன்புச்செல்வன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத நிலையில், அவருடைய செல்போனுக்கு குடும்பத்தினர் தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்த நிலையில் அவருடைய குடும்பத்தினருக்கு சந்தேகம் எழுந்த போது, அவரது மகன் ஜெய் கிஷோர்  தனது தந்தையை தேடி அவர் வழக்கமாக நடைபயிற்சி மேற்கொள்ளும் கணவாய்ப்பட்டி பிரிவிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு தனது தந்தை ஒற்றை கால் செருப்பு மட்டும் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுதொடர்பாக அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது அன்புச்செல்வன் காரில் வந்த ஒரு கும்பல் கடத்திச் சென்றதாக தெரிவித்தனர்.



இதனால் பதறிப்போன கிஷோர் வத்தலகுண்டு போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இந்த புகாரின் அடிப்படையில் தனது தந்தைக்கு சென்னையை சேர்ந்த தொழிலதிபர் அருள் நாயகத்துக்கும் இடையே ஹோட்டல் சொத்து வாங்கல் பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அருள்நாயகம்  அவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கடத்திச் சென்றிருக்கலாம் என்று சந்தேகிப்பதாக குறிப்பிட்டிருந்தார். புகாரை பெற்ற போலீசார் உடனடியாக விசாரணையில் இறங்கினர் . கடத்தல் கும்பலை பிடிக்க நிலக்கோட்டை காவல்துறை கண்காணிப்பாளர்  சுகுமார், மேற்பார்வையில் வத்தலகுண்டு ஆய்வாளர் முருகன் தலைமையிலான போலீசார் தனிப்படை அமைக்கப்பட்டது. தீவிர விசாரணையில் இறங்கிய போலீசார் குறிப்பாக அன்புச்செல்வன் செல்போன் செயல்பாட்டை ஆய்வு செய்தனர்.



அப்போது சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா பழையங் குளம் கண்மாய் அருகே அவரது செல்போன் செயல்பாட்டில் இருப்பது தெரிய வந்தது . அதன் பேரில் தனிப்படை போலீசார் அங்கு விரைந்தனர். அப்பகுதியில் உள்ள மணி என்பவர் வீட்டில் ஒரு அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அன்புச்செல்வனை போலீசார் மீட்டனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் கொடுக்கல் வாங்கல் தகராறில் அன்புச்செழியன் அருள் நாயகத்தின் ஆதரவாளர்கள் கடத்திச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அன்புச்செல்வன் கடத்திச்சென்ற அருள் நாயகத்தின் ஆதரவாளர்கள் வத்தலகுண்டுவைச் சேர்ந்த 7 பேரை போலீசார் கைது செய்ததுடன் கடத்தலுக்கு பயன்படுத்தி கார், கத்தி போன்ற ஆயுதங்களையும் போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர். இதற்கிடையே கடத்தல் கும்பலை ஒரே நாளில் 7 மணி நேரத்தில் துரிதமாக பிடித்த தனிப்படையினரை திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் சீனிவாசன் பாராட்டி பரிசுகளை வழங்கினார்.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூப்பில் வீடியோக்களை காண