Madurai Murder: மதுரையில் அக்காவையும் அவர் காதலித்த நபரையும், வெட்டிக் கொன்ற பிரவீன் குமாரை போலீசார் கைது செய்துள்ளனர்.


காதலுக்கு எதிர்ப்பு:


மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கூடக்கோவில் காவல்நிலைய  எல்லையில் அமைந்துள்ளது கொம்பாடி கிராமம். அங்கு வசித்து வரும் நந்திபெருமாள் மகன் சதீஷ்குமாருக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த அழகுமலை என்பவரது மகள் மகாலட்சுமிக்கும் (25) இடையேயான பழக்கம் நாளடைவலி காதலாக மாறியுள்ளது. ஆனால், இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், மகாலட்சுமியின் காதலுக்கு அவரது பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், இரு குடும்பத்தினருக்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டுள்ளது.


கணவனை பிரிந்த மகாலட்சுமி:


காதல் பிரச்னைக்கு மத்தியிலேயே கடந்த 3 வருடங்களுக்கு முன்பு மகாலட்சுமிக்கு, அவரது பெற்றோர் வலையங்குளம் பகுதியை சேர்ந்த ஒருவருடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். ஆனால் வெறும் 3 வாரங்களிலேயே மகாலட்சுமி தனது பெற்றோர் வீட்டிற்கு வந்ததோடு, அவரது கணவரிமிருந்து விவாகரத்தும் பெற்றுள்ளார். இதற்கிடையே மகாலட்சுமியும், சதீஷ்குமாரும் மீண்டும் செல்போனில் பேச தொடங்கியுள்ளனர். இதனை அறிந்த மகாலட்சுமியின் சகோதரர் பிரவீன்குமார் (20), இருவரையும் கண்டித்துள்ளார். சதீஷ்குமாரின் உறவினர்களிடமும் இதுதொடர்பாக எச்சரித்தும்,  அவர்களது பழக்கம் தொடர்ந்துள்ளது.


தலையை வெட்டிக் கொலை:


தனது அக்காவும், சதிஷ் குமாரும் தொடர்ந்து பழகி வந்ததால் ஆத்திரம் அடைந்த பிரவீன்குமார், உங்கள் இருவரையும் கொல்லாமல் விடமாட்டேன் என ஏற்கனவே மிரட்டியுள்ளார்.  அதன்படி,  நேற்று முன்தினம் இரவு தனது கட்டிட வேலையை முடித்துக் கொண்டு சதிஷ்குமார் வீட்டிற்கு தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது,  கொம்பாடி ஒத்தவீடு அருகே மறைந்திருந்த பிரவீன் குமார்,  சதிஷ்குமாரின் கண்களில் மிளகாய் பொடியை தூவியுள்ளார். கண் எரிச்சலுடன் அவர் நடப்பது அறியாமல் அங்கிருந்து தப்பி ஓட,  துரத்தி சென்ற பிரவீன்குமார் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். என் அக்காவுடன் பேசாதே, பழகாதே என்றேன். நீ,கேட்கவில்லையே என கத்தியபடியே, சதீஷ்குமாரின் தலையை பிரவீன் குமார் வெட்டி துண்டாக்கினார். அந்த தலையை மட்டும் எடுத்துவந்து அங்குள்ள நாடக மேடை மீது வைத்துவிட்டு, நேராக தனது வீட்டுக்கு சென்றுள்ளார்.


அக்காவை கொன்ற தம்பி:


வீட்டில் இருந்த தனது அக்காள் மகாலட்சுமியையும் அரிவாளால் பிரவீன் குமார் சரமாரியாக வெட்ட,  தடுக்க முயன்ற தாயார் சின்ன பிடாரியின் கையில் அரிவாள் வெட்டு விழுந்து அவரது கை துண்டானது. இதனிடையே, படுகாயமடைந்த மகாலட்சுமி சிறிது நேரத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார். இதைகண்டதும் அங்கிருந்து பிரவீன்குமார் தப்பிச் சென்றார். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், சதீஷ்குமார், மகாலட்சுமியின் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.  தலைமறைவாக இருந்த பிரவீன்குமாரை போலீசார் கைது செய்தனர். இந்த இரட்டைக் கொலை சம்பவம் மதுரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.