தஞ்சாவூர்: மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் தமிழக விவசாயிகளின் நீண்ட நெடுங்கால கோரிக்கையான அரசே நெல் அறுவடை இயந்திரங்கள் வாடகைக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 


தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். கோடையிலும் நெல் சாகுபடியும் செய்யப்படுகிறது. மேலும் மக்காச்சோளம், கரும்பு, எள், பயறு போன்றவையும் சாகுபடி செய்யப்படுகிறது.


இதற்காக மேட்டூர் அணை ஜூன் மாதம் 12-ந்தேதி திறக்கப்படும். குறிப்பிட்ட தேதியில் இருந்து அணை திறக்கப்பட்டால் குறுவை பரப்பளவு அதிகரிக்கும். தாமதமாக திறந்தால் குறுவை பரப்பளவு குறைந்து சம்பா, தாளடி சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். இந்தியாவில் தமிழகத்தில் குறிப்பாக தஞ்சாவூர், திருவாரூர், நாகை மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர் என டெல்டா மாவட்டங்களின்  சுமார் 25லட்சத்திற்கும் மேலான பரப்பில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. காவிரி நதி நீர் மூலம் இந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களின் சுமார் பத்து லட்சத்துக்கு மேல் சம்பா நெல் பயிர் சாகுபடி  செய்யப்பட்டுள்ளது. தற்போது நெல் பயிர்கள் அறுவடை செய்யப்படுகிறது.




தமிழக டெல்டா விவசாயிகளின் நீண்ட நெடுங்கால கோரிக்கையான அறுவடை எந்திரங்களை அரசே வழங்க வேண்டும் என்பதுதான் முக்கிய கோரிக்கையாக உள்ளது. போதிய  அறுவடை எந்திரங்கள் இல்லாதால் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் மிகவும் அவதியடைகின்றனர். எனவே நாளை நடைபெறும் மத்திய அரசு இடைக்கால பட்ஜெட்டில் தமிழக விவசாயிகள்  நீண்ட நெடு நாள் கோரிக்கை ஏற்று தமிழக வேளாண் பொறியியல் துறைக்கு  தேவையான அறுவடை எந்திரங்கள் வழங்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.


தமிழகம் மற்றும் டெல்டா மாவட்ட விவசாயிகள் சார்பாகவும், தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தின் சார்பாகவும் மத்திய அரசையும், மத்திய வேளாண் துறை அமைச்சரையும் கேட்டுக் கொள்கிறோம். குறுவை, சம்பா காலத்தில் ஒரே நேரத்தில் விவசாயிகள் அறுவடை பணிகளை செய்வதால போதிய அளவு அறுவடை இயந்திரங்கள் கிடைப்பதில்லை. பிற மாவட்டங்களில் இருந்து தனியார் மூலம் அறுவடை இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு அறுவடை செய்யப்படுகிறது. இதனால் அதிகம் செலவு ஏற்படுகிறது. எனவே குறைந்த வாடகையில் அரசே அறுவடை இயந்திரங்களை வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுகுறித்து தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்க மாநில தலைவர் முகமது இப்ராஹிம் கூறியதாவது: டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் சாகுபடி நேரத்தின் போது போதிய அளவு நெல் அறுவடை இயந்திரங்கள் இல்லாமல் வெகுவாக சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனால் அறுவடை செய்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் வெளி மாவட்டங்களில் இருந்து தனியார் நெல் அறுவடை இயந்திரங்கள் வரவழைக்கப்படுகின்றனர். மேலும் இதற்கு வாடகை அதிகம் என்பதால் நலிவடைந்த நிலையில் உள்ள விவசாயிகள் மேலும் பாதிக்கப்படுகின்றனர். எனவே மத்திய அரசு மாவட்டங்கள் தோறும் அரசு சார்பில் நெல் அறுவடை இயந்திரங்களை குறைந்த வாடகையில் வழங்க வேண்டும். இதுகுறித்த நாளை இடைக்கால பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.