ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் ஆகிய கடல் பகுதிகளில் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்று வருகின்றனர். அதில் ஒரு சில மீனவர்கள் அரசின் விதிகளை மீறி சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட இரட்டைமடி, சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி வருகின்றனர். இவர்களை கடலோர காவல் படை, கடல் மீன்பிடி சட்ட அமலாக்க பிரிவு மற்றும் மீன்வளத்துறை ஆகியோர் தொடர்ந்து கண்காணித்து படகுகளையும், வலைகளையும் பறிமுதல் செய்கின்றனர்.




இந்நிலையில் இன்று மண்டபம் வடக்கு கடற்கரை பகுதியில் மீன்வளத்துறை உதவி இயக்குநர் அப்துல் காதர் ஜெய்லானி தலைமையிலான மீன்வளத்துறை அலுவலர்கள், கடலோர காவல்படை, கடல் மீன்பிடி சட்ட அமலாக்க பிரிவு ஆகியோர் கடல் பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்த முபாரக், செய்யது ரில்வான், சிந்தூஸ் ராணி ஆகிய மூவருக்குச் செந்தமான விசைப்படகுகளை பறிமுதல் செய்தனர். மேலும், அந்த மூன்று படகுகளிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 6 டன் எடை கொண்ட மீன்களை ஏலத்தில் விடும் நடவடிக்கையில் அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.




ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடி தொழில் பிரதான தொழிலாக விளங்கி வருகிறது. விசைப்படகு, நாட்டுப்படகு, கட்டுமரம், சிறியபடகு என பல முறைகளில் மீனவர்கள் மீன் பிடிக்க சென்று வருகின்றனர். மேலும், ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி ஒரு சில மீனவர்கள் மீன்பிடித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலை மண்டபம் தெற்கு மீன் பிடி துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற  மண்டபம் மீன்பிடி விசைப்படகுகள் சில அரசால் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பதாக மண்டபம் மீன் வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. 




இதனையடுத்து இன்று  காலை மீனவர்கள் மீன் பிடித்து விட்டு கரை திரும்பி கொண்டிருந்த  போது மண்டபம் மீன் வளத்துறை உதவி இயக்குநர் தலைமையில் மெரைன் போலீசார் உதவியுடன் மீன் வளத்துறை ஊழியர்கள் கொண்ட குழு ரோந்து படகில் சென்று நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த படகுகளை சோதனை செய்தனர். அப்போது மண்டபத்தை சேர்ந்த முபாரக், செய்யது ரில்வான், சிந்துஸ் ராணி ஆகியோருக்கு சொந்தமான  மூன்று விசைப்படகுகளில் தடை செய்யப்பட்ட இரட்டை மடியை பயன்படுத்தி மீன் பிடித்தது தெரிய வந்தது. இதனையடுத்து மூன்று விசைப்படகுகளையும், படகில் இருந்த சுமார் 6 டன் மீன்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட வலைகளை பறிமுதல் செய்த மண்டபம் மீன் வளத்துறை அதிகாரிகள் படகின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வழக்கு பதிவு செய்யப்பட்ட மூன்று விசைப்படகுகளுக்கு அரசால் வழங்கப்படும் மானிய டீசல், மீன் பிடி அனுமதி சீட்டு உள்ளிட்டவைகள் வழக்கு முடியும் வரை ரத்து செய்யபடுவதாக மண்டபம் மீன் வளத்துறை உதவி இயக்குநர் தெரிவித்தார்.