உயர்நீதிமன்ற மதுரை கிளை செய்திகள் 

 

பேக் தயார் செய்யும் தொழிலாளியிடம் 10 லட்சம் பணம் பறித்ததாக தொடரப்பட்ட வழக்கில் மதுரையைச் சேர்ந்த பெண் இன்ஸ்பெக்டர் காவல் வசந்தி ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பாக  விசாரணைக்கு வந்தது.



 

அப்போது அரசு தரப்பில், "காவல் ஆய்வாளர் வசந்தியின் கணவர்,  விசாரணைக்காக ஆஜராகினார். தற்போதுவரை ஓரளவிற்கு ஒத்துழைப்பு வழங்குகிறார். வசந்தியின் மீது இவை தவிர 3 வழக்குகள் உள்ளன" என தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதி தொடர்ந்து 30 நாட்கள் தினமும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் காலை 10 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும். விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். மேலும் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றாலோ, சாட்சிகளை கலைக்க முயன்றாலோ,  அவரது ஜாமின் மனுவை ரத்து செய்யக்கோரலாம் என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.



பென்னிக்ஸ் - ஜெயராஜ் கொலை வழக்கு கண்கலங்கிய படி சாட்சியம் அளித்த ஜெயராஜின் நண்பர் இசக்கிதுறை 

 



 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை மகனான ஜெயராஜ் - பென்னிக்கிஸ் கடந்த கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் 19 ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்துசெல்லப்பட்ட நிலையில் விசாரணையின் போது காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். இருவர் உயிரிழந்தது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் தொடரடப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர்  ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9பேரின் மீது சி.பி.ஐ தரப்பில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையானது  மதுரை மாவட்ட  முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி பத்மநாபன் முன்பாக விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கில் கைது செய்யப்பட்ட 9பேரும் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர்.  இதனையடுத்து இந்த வழக்கில் உயிரிழந்த  ஜெயராஜ் - பென்னிக்ஸ் கடையின் அருகே கடை வைத்திருக்கும் இசக்கித்துரை என்பவரிடம் சாட்சியம் விசாரணை நடைபெற்றது. சாட்சியத்தின் போது சம்பவம் நடைபெற்றுதற்கு முந்தைய நாளான ஜூன் 18ஆம் தேதியன்று சார்பு ஆய்வாளர் பாலகிருஷ்ணன் சாத்தான்குளத்தில் ஜெயராஜ் கடையின் அருகே பொதுமக்களிடம் தகாத முறையில் பேசியதாகவும், அப்போது ஜெயராஜ் தனது அருகில் நின்று கொண்டிருந்தவர்களிடம் இது போன்று பொதுமக்களிடம் கண்ணிய குறைவாக நடக்கும் காவல்துறையினர் மீது தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். இது நடந்த அடுத்த நாளில் தான் காவல்துறையினர் அழைத்து சென்றதாகவும் கூறியுள்ளார். சாட்சியத்தின் போது பென்னிக்ஸ் குறித்து பேசியபோது இசக்கித்துரை கண்கலங்கியபடி சாட்சியமளித்தார்.  இசக்கி துரை அளித்த சாட்சியத்தில் கொலை சம்பவம் தொடர்பாக புதிய  தகவலை கூறியுள்ளது வழக்கு விசாரணையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து இசக்கி துரையிடம் குற்றம் சாட்டப்பட்ட நபர்களின் தரப்பில் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையின் போது இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி  வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் அக்டோபர் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் முன்னதாக ஜெயராஜின் மனைவி செல்வராணி, மகள் பெர்சி மற்றும் உறவினரான தேசிங்ராஜா, ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் நண்பர்கள், அருகில் உள்ள கடைகாரர்கள் உள்ளிட்ட 22 பேரிடம் சாட்சியம் விசாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.



நடிகர் சூரி இல்ல திருமண விழாவில் நகை திருடிய நபருக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம் 



 

மதுரையை சேர்ந்த பிரபல காமடி  நடிகர் சூரி, இவரது சகோதரர் இல்லத் திருமண விழா கடந்த மாதம்  9-ஆம் தேதி மதுரை சிந்தாமணி பகுதியில் இருக்கக்கூடிய தனியார் திருமண மண்டபத்தில் நடந்த்து  திருமண நிகழ்ச்சியில் 10 சவரன்  நகை  திருடப்பட்டதாக  கீரைத்துறை காவல் நிலையத்தில்  புகார் அளிக்கபட்டது. வழக்கு பதிவு செய்த கீரைத்துரை காவல் துறையினர்  பரமக்குடியை சேர்ந்த விக்னேஷ் என்பவர் கைது செய்தனர். இந்நிலையில் சிறையில் இருக்கும்  தனக்கு ஜாமீன் வழங்க கோரி  உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு  நீதிபதி புகழேந்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. விக்னேஷின் தந்தை மற்றும் தாத்தா இருவரும், விக்னேஷ்  இதுபோன்ற குற்றச் செயலில் ஈடுபட மாட்டார் என உறுதிமொழி பத்திரம் வழங்கினர். அதை தொடர்ந்து நீதிபதி, தொடர்ந்து 60 நாட்களுக்கு காலையும், மாலையும் சம்பந்தப்பட்ட கீரைத்துறை காவல்நிலையத்தில் கையெழுத்திட வேண்டுமென்ற நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.