பூந்தோட்டம் தெருவில் கீரை விற்பனை படுஜோராக நடந்து கொண்டிருந்தது. சாலை ஓர வியாபாரிகள் ஆங்காங்கே முக மலர்ச்சியோடு ரெகுலராக வாங்கும் வாடிக்கையாளர்களுக்காக காத்திருந்தனர். அப்பகுதிவாசிகள் யாருக்கும் தொந்தரவு இல்லாமல் அவர், அவர் வேலைகளுக்கு பரபரப்பாக சென்று கொண்டிருந்தனர். அந்த வீதியில் தான் கமலம் பாட்டி கமகம பட்டர் வாசனையோட கருப்பட்டி ஆப்பத்த சுட்டுக் கொண்டிருந்தார்.
கூன் தள்ளிய வயதில் கண்களைச் சுருக்கி ஆப்பச் சட்டியில் எண்ணெயைத் தேய்த்து 'இஸ்சு' சத்தம் கிளம்பும்படி சூடான சட்டியில் லேசா தண்ணியைத் தெளித்தார். ஏற்கனவே கரைச்சு வச்சுருந்த மாவை பள்ளமான ஆப்ப சட்டியில் ஊற்றினார். மீண்டும் 'இஸ்சு' சத்தம். மூடியைப் போட்டு அடைத்துவிட்டு தனது இரண்டாவது ஆப்ப சட்டியிலும் ஆப்பத்தை தயார் செய்தார். ஆப்பம் வெந்ததும் சுத்திலும் தேச்சுக் கொடுத்துவிட்டு நடுவில் சீடக்காய் அளவு பட்டரை மேலே போட்டு மடித்து ஈய தட்டில் அடிக்கிக் கொண்டார். வழிப்போக்கில் பசியாற ஆப்பம் கேட்கும் நபர்களுக்கு வாழை இலையில் ஆப்பத்தை அழகாய் சுருட்டிக் கொடுத்தார் கமலம் பாட்டி.
மதுரை முனிச்சாலை பகுதியில் தான் உள்ளது பூந்தோட்டம் தெரு. கமலம் பாட்டிக்கு 80 வயசு நெருங்கி விட்டது. ஆனாலும் அவரின் வாடிக்கையான வேலைக்கு ஓய்வு இல்லை. மூன்று பிள்ளைகள பெற்ற கமலம் பாட்டி கணவர் இறந்த பின் பிள்ளைகளுக்கு ஆதரவாக இருந்து வருகிறார். தனது இரண்டு பெண் பிள்ளைகளுக்கும் திருமணம் செய்து வைத்து விட்டார். ஆனால் அவரது மகனுக்கு 45 வயதை கடந்து திருமணம் முடியவில்லை. அவர் மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார். இந்தச் சூழலில் தான் கமலம் பாட்டி, மகனுடன் முனிச்சாலை அருகே பட்டணம் பகுதியில் வசித்து வருகிறார். காலை 7 மணிக்கு பூந்தோட்டம் தெருவுக்கு வரும் பாட்டி கிட்டதட்ட 10 மணிவரை, தான் கொண்டுவரும் கருப்பட்டி ஆப்ப மாவை சுட்டு விற்பனை செய்து விடுகிறார். சில நேரம் படு ஜோர் வியாபாரம் சில நேரம் மிச்சம் சொச்சம் என்பதுதான் அவரின் நிலை.
இந்நிலையில் கமலம் பாட்டியை சந்திக்கச் சென்றோம். கடைக்கு சாப்பிட வந்தது போல் ஒரு ஆப்பம் 8 ரூபாய் மேனிக்கு, 2 ஆப்பத்த வாங்கி சாப்பிட்டோம். அவரின் அடுப்பு வியாபாரத்துக்கு இடையே நம்மிடமும் பேசினார். " 46 வருசமாக இதே நக்கலதான் ( இதே இடத்தில்) கடை போட்ருக்கேன். எனக்கு ஆப்பம் சுடத்தான் தெரியும் அதனால எனக்கு தெரிஞ்சத செஞ்சு வயித்த கழுவுறேன். என் மகளையும் கட்டிக் கொடுத்துட்டேன். ஆனா என் மகன்தான் ரெம்ப பாவம். கல்யாணம் ஆகாத கவலையில பித்து கண்டுக்கிட்டான். நான் இருக்கவர என் மகன பார்த்துக்கிறேன். நானும் போய்ட்டா என்ன செய்ய போறான்ற கவலை என்ன வாட்டுது. ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம். நான் சுடுற ஆப்பம் இந்த ஏரியா மக்களுக்குப் பிடிக்கும். அதனால தான் இந்த ஏரியாவுல ரெம்ப வருசம் கடைபோட முடியுது. கடை ஆரம்பிச்ச சமயம் ஓட்டு வீடும், கூரை வீடும்தான் இருக்கும். இன்னைக்கு நான் நிமிந்து பார்க்க முடியாத அளவுக்கு வீடுக ஒசந்து இருக்கு. என் ஆப்பம் பச்சரிசி இல்ல, புழுங்கல் அரிசி அதனால வயித்துக்கு ஒன்னும் பண்ணாது. சின்ன குழந்தைக கூட சாப்டலாம். அரிசு மாவு, கருப்பட்டி, பட்டர். இதுதான் என் பொருளு. இதுக்கு தொட்டுக்க சைடிஸ் கூட வச்சுக்க வேணாம், அப்படியே லவக்குண்டு அலுவா மாதிரி வாய்க்குள்ள போகும்" என்றார் சிரித்த முகத்தோடு.
கமலம் பாட்டி கடைக்கு பக்கத்தில் இருக்கும் பூ வியாபாரி மீனாட்சியிடம் பேசினோம். ”நான் 10 வருசத்துக்கு மேல இதே இடத்தில்தான் பூ கட்டுறேன். கடைக்கு வந்ததும் ரெண்டு ஆப்பத்த சாப்பிட்டுதான் வேலையே செய்ய ஆரம்பிப்பேன். எனக்கு தொணையா கமலம் பாட்டியும், அதுக்கு தொணையா நானும் வேலைய பார்ப்போம். நினைச்சா அரை டீ பார்சல் வாங்கிக் குடிப்போம். பாட்டியின் கருப்பட்டி ஆப்பம் சூப்பரா இருக்கும். சில நேரம் யாராச்சும் கேட்டா அதில் முட்டையும் ஊத்திக் கொடுக்கும். அது ஒரு டேஸ்டா இருக்கும். பாட்டி தன் மகனோட வாழ்ந்துக்கிட்டு இருக்காங்க. அரசு இவங்களுக்கு ஏதாச்சும் உதவி செஞ்சா நல்லா இருக்கும்” என்றார் வாஞ்சையோடு.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - ராமேஸ்வரம்: பாம்பன் இந்திரா காந்தி சாலை பாலத்துக்கு இன்றுடன் வயது 34...!
தள்ளாடும் வயதில் தன்னம்பிக்கை இழக்காத கமலம் பாட்டி பிறருக்கு ஒரு உந்து சக்தி தான்.