நமது நாட்டில் மொழி பிரச்சினையால் மக்கள் படும் அவஸ்தைகள் குறித்து பல்வேறு சம்பவங்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.  இந்தி தெரியாததால் வங்கியில் கடன் பெற இயலாத நிலை, இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடிக்க முடியாத சூழ்நிலை. ஏன் இன்னும் ஒருபடி மேலே போய் இந்தி தெரியாத காரணத்திற்காக உணவை டெலிவரி செய்தபின் மீதி பணத்தை தர  மறுத்த ஒரு தனியார் நிறுவனம்  பின்னாளில் மன்னிப்பு கேட்ட செய்தி வரை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், இங்கே வங்கி ஏடிஎம் உடைக்கப்படும் தகவலை டெல்லியில் இருந்து இந்தியில் பேசிய ஊழியர் சொன்ன தகவலை ராமநாதபுரம் போலீசார் புரிந்துகொள்வதற்குள்  ஏடிஎம்மை கம்பியால்  உடைத்த மர்ம நபர் தப்பிச் சென்ற சம்பவம் ராமநாதபுரத்தில்  அரங்கேறியிருக்கிறது.



ராமநாதபுரத்தில் வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து மா்ம நபா் கொள்ளையடிக்க முயன்றபோது, தகவல் கிடைத்து போலீஸாா் வருவதற்குள்  மர்ம நபர்  தப்பியோடிவிட்டாா். இருந்தாலும்  40 லட்சம் தப்பிய சம்பவம் வங்கி ஊழியர்களின் வயிற்றில் பாலை வார்த்திருக்கிறது. ராமநாதபுரம், பாரதி நகரில் பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் உள்ளது. நேற்று முன்தினம்  நள்ளிரவு 12 மணியளவில் இந்த ஏடிஎம்-இல் இரும்பு கம்பியுடன் மா்ம நபா் ஒருவர் நுழைந்து அதை உடைக்க முயற்சித்துள்ளாா். ஏடிஎம் இயந்திர இயக்கமானது புதுதில்லியில் உள்ள வங்கியின் பிரதான அலுவலகத்தின் கண்காணிப்பு அலுவலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளதால் அங்கிருந்த ஊழியா்கள்  பாா்த்து ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு தகவல் தந்துள்ளனா். ஆனால், டெல்லியில் இருந்து பேசியவா்கள் ஹிந்தியில் பேசியது இங்கு கட்டுப்பாட்டு அறையில் இருந்தவா்களுக்கு சரியாகப் புரியாததால், பாரதி நகரில் ஏடிஎம் அருகே தகராறு என அந்தப்பகுதி போலீஸ் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கேணிக்கரை காவல் நிலைய போலீசார்  உள்ளிட்டோா் பாரதி நகா் பகுதிக்கு விரைந்து சென்றுள்ளனா். அப்போது போலீஸாரின் நடமாட்டத்தைக் கண்ட மா்ம நபா் கம்பியை அங்கேயே போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டாா்.




மேலும், போலீஸாருக்கு தாமதமாகவே ஏடிஎம் கொள்ளை முயற்சி தகவல் தெரிய வந்துள்ளது. அவா்கள் குறிப்பிட்ட அந்த  ஏடிஎம் இயந்திரத்துக்கு சென்றபோது ஏடிஎம் இயந்திரம் பாதி உடைந்த நிலையில் இருந்ததும். மா்மநபா் தப்பியதும்  தெரியவந்தது. ஆனால், மா்ம நபரின் உருவம் கண்காணிப்புக் கேமராவில் பதிவாகி இருந்தது. மொழி பிரச்சனையால் ஏற்பட்ட குழுப்பத்திற்கு பிறகும் போலீஸாா் குறிப்பிட்ட நேரத்தில் அப்பகுதிக்குச் சென்றதால் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த 40 லட்சம் தப்பியது. இதனையடுத்து, போலீசார் மோப்ப நாயை வரவழைத்தனர். போலீஸ் மோப்பநாயானது  சிறிது தூரம் ஓடி நின்றுவிட்டது. இதனைத்தொடர்ந்து கைரேகை நிபுணா்கள் கைரேகைகளை சேகரித்துள்ளனா்.



மேலும்,  கண்காணிப்புக்கேமரா காட்சி அடிப்படையில் மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். அந்த நபா் இருசக்கர வாகனத்தில் வந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனா். ராமநாதபுரம் சாலை தெருவில் உள்ள வங்கியின் கிளை மேலாளா் ராமகிருஷ்ணன்அளித்த புகாரின் பேரில் கேணிக்கரை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா். ஏடிஎம் இயந்திரத்தை கடப்பாரை கம்பி மூலம் உடைத்து பணத்தை கொள்ளை அடிக்க முயற்சி செய்த மர்ம நபரின் முயற்சி பலன் அளிக்காததால் 40 லட்சம் தப்பியதாக வங்கி ஊழியர்கள் பெருமூச்சு விட்டனர்.