ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று மக்கள் குறைத்தீர் கூட்டம் நடந்து வருகிறது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடக்கும் குறைத்தீர் கூட்ட நாட்களில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பொதுமக்கள் தங்கள் குறைகளை கோரிக்கையாகவும் புகாராகவும் மாவட்ட  ஆட்சியரிடம் நேரில்  வழங்குவார்கள். ஆட்சியர் இல்லாத நாட்களில் மாவட்ட வருவாய் அலுவலர் இக்கூட்டத்தை நடத்துவார். அவ்வாறு வழங்கப்படும் புகார் மனுக்களின் மீது நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்பட்டு வருகிறது.  இந்த நிலையில்,  இன்று ஆட்சியர் அலுவலகத்தில் வழக்கம்போல், மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமையில்   நடைபெற்று வந்த மக்கள் குறைத்தீர் கூட்டத்துக்கு வந்த ஒரு இளம்பெண் ஆட்சியர் முன்பாக தன் மீது மண்ணெண்ணெய்  ஊற்றி தீவைத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.




ராமநாதபுரம் மாவட்டம் சூரங்கோட்டையைச் சேர்ந்த முனீஸ்வரி என்பவர் ராமநாதபுரம் மாவட்டம் சித்தனேந்தல் பகுதியைச் சேர்ந்த நாகபாண்டியை கடந்த 8 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து சூரங்கோட்டையில் வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்துள்ளது. இந்த நிலையில், இவர்களுக்கிடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு சண்டையாக மாறி  கடந்த 2 வருடங்களாக பிரிந்து தனித்தனியே வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில் அவர்களின் ஒரே மகன் யாரிடம் வளர்வது என, கடந்த மாதம் ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் நடந்த நாட்டுப் பஞ்சாயத்தில் தாய் முனீஸ்வரியிடமிருந்து 6 வயது ஆண் குழந்தையை  பிரித்து தந்தை நாகபாண்டியிடம் கொடுத்து ஒப்படைத்துள்ளனர்.இதனால் ஆறு வயது ஆண் குழந்தையிடம் வளர்ந்து வருகிறார்.




இந்த நிலையில் மகனை பிரிந்து தவித்து வந்துள்ளார்.   தன் மகன் தன்னுடன் இல்லாத  சோகத்தில் வாழ்ந்த முனீஸ்வரி தனது மகனுக்கு கிட்னியில் கோளாறு இருப்பதால், கணவரின் வீட்டார்  அவனை சரிவர கவனிக்க மாட்டார்கள் என்பதால் தன்னிடமே ஒப்படைக்க வேண்டும்  கோரி பல முறை காவல் நிலையத்தில் புகார் செய்து சட்ட ரீதியாக அணுகியும் நடையாய் நடந்துள்ளார். ஆனால், காவல்துறையினர்  எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இன்று காலை ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சந்திரகலா வரும் போது மண்ணெண்ணெய் ஊற்றி தீ குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.




இதனை அடுத்து அவரை மீட்ட ஆட்சியரின் வாகன ஓட்டுனர் உள்ளிட்ட அங்கிருந்த அரசு அலுவலர்கள் அவரை ஆட்சியரின் தனியறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு ஆறுதலும் அறிவுறையும் சொல்லப்பட்டது. தொடர்ந்து அவரது புகாரைப்பெற்று விசாரணை மேற்கொண்டு  உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து அனுப்பி வைத்தனர்.