75 வது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவையொட்டி மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் சுதந்திரப் போராட்ட வீரா்களின் புகைப்படக் கண்காட்சி கடந்த வியாழக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 1ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் நடைபெற்ற இக் கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பார்வையிட்டு இருந்தனர்.






இந்நிலையில் நிறைவு நாளான இன்று அமுதப்பெருவிழா நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி, ஒவியப்போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற அரசுப்பள்ளி மாணவ,மாணவிகளுக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் பாராட்டுச்சான்றிதழ்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். மேலும் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளோடு சேர்ந்து குழுப்புகைப்படம் எடுத்துக்கொண்டார்.



 

புதன்கிழமை என்பதால் மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் சைக்கிள் மூலமாக நிகழ்ச்சிக்கு வருகை தந்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் பேசுகையில், சித்திரைத் திருவிழா காவல்துறை பாதுகாப்போடு ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்போடு சிறப்பாக சித்திரைத் திருவிழா நடைபெற சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம். விரைவில் தண்ணீர் திறக்கப்படும். மீனாட்சியம்மன் திருக்கல்யாணத்தை பொதுமக்கள் காண பல்வேறு இடங்களில் எல்.இ.டி திரைகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. 6 முதல் 8 எல்.இ.டி திரைகள் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



 




மீனாட்சியம்மன் கோவிலில் நடைபெறும் அனைத்து சித்திரை திருவிழா நிகழ்ச்சிகளையும் கோவில் இணையதளம் மூலமாக வெளியிட பரிசீலனை செய்யப்படும்” எனவும் பேசினார்.