மதுரை முனிச்சாலையில் உள்ள தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜோசப் ஜெயசீலன், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில், "எங்கள் பள்ளியில் பணியாற்றிய 2 ஆசிரியைகளை தற்காலிகமாக இடமாற்றம் செய்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும்" என மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்  தொடர்ச்சியாக பாலியல் தொந்தரவு செய்வதாக, ஆசிரியைகள் புகார் அளித்ததன் அதனடிப்படையிலேயே அவர்கள் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டனர் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, 2 பெண் ஆசிரியைகளும் அனுப்பிய புகார் கடிதத்தின் அடிப்படையில் கீரைத்துறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, விசாரணையை உடனடியாக தொடங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

அதன்பேரில் மகளிர் போலீசார் ஜோசப் ஜெயசீலன் மீது வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கேட்டு ஜோசப் ஜெயசீலன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், முதல் தகவல் அறிக்கையில் கூறியிருப்பது போல எந்த சம்பவமும் நடக்கவில்லை. முதல் கட்ட விசாரணை நடத்தாமல் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. எனவே எனவே முன்ஜாமீன் வழங்க வேண்டும்" என கூறியிருந்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி முரளிசங்கர், மனுதாரரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

 



 

உரிமையியல் வழக்குகளில் விதியை கடுமையாக பின்பற்ற வேண்டும்.- உயர்நீதிமன்ற மதுரை கிளை

 

உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், "உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஏராளமான இரண்டாவது மேல்முறையீடு வழக்குகள் எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் சென்றடையாததால் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன.  மனுதாரர்கள் சரியான முகவரியை வழங்குவதில்லை. பெயர், கிராமத்தின் பெயர் மட்டுமே குறிப்பிடப்படுகிறது. முழு முகவரி குறிப்பிடுவதில்லை. உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் இரண்டாவது மேல்முறையீடு மனுக்களிலும் அதே முகவரியே குறிப்பிடப்படுகிறது.இதனால் நோட்டீஸ் அனுப்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. உரிமையியல் வழக்குகளில் மனுதாரர்கள், எதிர்மனுதாரர்களின் சரியான, முழுமையான முகவரி இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த விதியை கடுமையாக பின்பற்ற வேண்டும். 

 

முழு முகவரி இடம் பெற வேண்டும். அவ்வாறு இல்லாத உரிமையியல் வழக்குகளை திரும்ப வழங்கலாம்.ஆதார் எண்கள், செல்போன், தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரியையும் உரிமையியல் வழக்குகளில் சேர்க்க வேண்டும். உரிமையியல் வழக்குகளில் இந்த விதியை கடுமையாக பின்பற்றுமாறு அனைத்து கீழமை நீதிமன்றங்களுக்கும்  பதிவுத்துறை உத்தரவிட வேண்டும்" என உத்தரவில் கூறியுள்ளார்.