மதுரை வில்லாபுரம் அருகே உள்ள வர்ம மருத்துவமனைக்கு முழங்கால் வலிக்கு சிகிச்சைக்கு சென்ற ஆயுதப்படை காவலர் மாரடைப்பால் திடீர் மரணம் அடைந்தார். அவனியாபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் ராஜபாண்டி ( வயது 36) வசித்து வருகிறார். 






இவரது மனைவி கண்மணி ( வயது 30) இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ராஜபாண்டி மதுரை ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மூட்டு வலியில் அவதிப்பட்டு வந்ததால் ராஜபாண்டி வில்லாபுரம் வீரபத்திரப்பிள்ளை காம்பவுண்ட் பகுதியில் உள்ள சிவா வர்ம கிளினிக் என்னும் வர்ம மருத்துவமனையில் முழங்காலுக்கு சிகிச்சை பெற்று வந்ததாக சொல்லப்படுகிறது.




 

நேற்று முழங்கால் வலியில் அவதிப்பட்டு வந்தவருக்கு சிகிச்சை அளிக்கும் போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் அருகில் உள்ள தனியார்  மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எனவே இதுகுறித்து ராஜபாண்டியின் மனைவி கண்மணி அவனியாபுரம் காவல் நிலையத்தில் தனது கணவருக்கு தவறான சிகிச்சை அளித்ததால் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்ததாக புகார் அளித்தார். அதன் பேரில் அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த ராஜபாண்டியன் உடலை உடற்கூறு பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் பிரேத பரிசோதனைகள் வரும் முடிவின் அடிப்படையில் அவனியாபுரம் போலீசார் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக தகவல் தெரிவித்துள்ளனர்.