நாளையதை நாளைக்கு விட்டுட்டு அமைதியாக தூங்கவும் - உலக தூக்க தின சிறப்பு செய்தி.
2025 உலக தூக்க தினம்
இன்று உலகம் முழுவதும் “உலக தூக்க தினம்” (World Sleep Day) கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு தூக்க தினத்தின் நோக்கம், நல்ல தூக்கத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி, தூக்கக் குறைபாட்டால் ஏற்படும் விளைவுகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும். நமது உடல் மற்றும் மனநலத்திற்காக தூக்கம் என்பது ஒரு அடிப்படையான தேவை. சரியான தூக்க பழக்கங்கள் உடல் ஆரோக்கியத்தையும் மன அமைதியையும் வழங்குகிறது.
தூக்கத்தின் முக்கியத்துவம்
தூக்கம் என்பது உடல் மற்றும் மனசுக்கு ரீச்சார்ஜ் மாதிரி. போன் சார்ஜ் பண்ணின மாதிரி, நம்ம உடம்பையும் தூக்கம் ரீசெட் பண்ணும். தூக்கம் போதுமான அளவில் இருந்தால், உடலும் மனசும் புத்துணர்ச்சியுடன் செயல்படும். தினசரி வாழ்க்கையில் நிறைவு மற்றும் செயல்திறனை தூக்கம் அதிகரிக்கிறது.
நல்ல தூக்கம் இருந்தால் மனம் தெளிவாக இருக்கும், யோசனை விரைவாக நடைபெறும், ஒரே விஷயத்தை எளிதாக புரிந்துகொள்ள முடியும், கோபம், கவலை, மனச்சோர்வு குறையும், உடல் நோய்கள் குறையும்.
தூக்கம் குறைந்தால் ஏற்படும் விளைவுகள்
தூக்கம் குறைபாட்டால் உடல் மற்றும் மனநலத்துக்கு பல விளைவுகள் ஏற்படும். மனச்சோர்வு, கவலை அதிகரிக்கும், முடிவெடுக்கும் திறன் குறையும் ஆரோக்கியம் பாதிக்கப்படும், உடல் எளிதில் சோர்வடையும், நோயெதிர்ப்பு சக்தி குறையும்.
இயற்கையை பின்பற்றும் தூக்க வழக்கம்
நம்ம உடல் இயற்கையின் ரிதத்திற்கு ஏற்ப தூங்கும். நாய் தூங்க விரும்பினால் தூங்கும், பறவைகள் மாலை நேரத்தில் தன்னுடைய கூட்டுக்கு திரும்பும். ஆனாலும் மனிதர்கள் மட்டும் தான் இயற்கைக்கு எதிராக நடந்து கொள்கிறார்கள் – மொபைல், வேலை, விளையாட்டுகள் போன்றவற்றால் தூக்க நேரம் மாற்றப்படுகிறது.
அன்றாட உடலியக்க சுழற்சி (Circadian Rhythm) ஏற்ப தூங்கினால், உடல் மற்றும் மனம் சரியாக செயல்படும்.
அதிகாலை எழுந்து, இரவில் விரைவாக தூங்கும் பழக்கம் மனதளவில் நல்ல பலன்களை வழங்கும்.
தூக்கம் குறைவதற்கான முக்கிய காரணங்கள்
1. அதிக யோசனை நாளைக்கு என்ன நடக்கும்? பிரச்னை சரியாகுமா? இப்படி தொடர்ந்து யோசித்தால் மூளை ஓய்வில்லாமல் செயல்படும். இதனால் தூக்கம் தாமதமாகும்.
2. மொபைல், டிவி பார்ப்பது - தூங்குவதற்கு முன்பு மொபைல், டிவி பார்ப்பது மூளையை விழிக்க வைக்கும். இதனால் தூக்கம் தாமதமாகும்.
3. பயம் மற்றும் கவலை - எதிர்காலத்தைப் பற்றிய பயம், பதற்றம் தூக்கத்தை குறைக்கும். மனசு அமைதியாக இல்லாததால் ஆழ்ந்த உறக்கம் கிடைக்காது.
4. தூக்க நேரம் மாறுவது - தினமும் ஒரே நேரத்தில் தூங்காமல் மாற்றி மாற்றி தூங்கினால், உடம்பின் அன்றாட உடலியக்க சுழற்சி ( (Circadian Rhythm) பாதிக்கப்படும்.
5. உடல் அசைவு இல்லாதது - நாளை முழுவதும் உடல் அசைவு இல்லாமல் இருந்தால், உடம்பு சோர்வடையாது. இது தூக்கத்தை தாமதமாக்கும்.
6. சுற்றுப்புறம் அமைதியாக இல்லாதது - தூங்கும் இடத்தில் அதிக ஒளி, ஒலி இருந்தால் மூளை ஓய்வதில்லை. இதனால் ஆழ்ந்த உறக்கம் குறையும்.
தூக்கத்தை சரிசெய்ய வழிகள்
நேரம் பின்பற்றவும்: தினமும் ஒரே நேரத்தில் தூங்கவும், எழவும்.
ஸ்கிரீன் லைட்டை தவிர்க்கவும்: தூங்குவதற்கு முன்பு மொபைல், டிவி பார்ப்பதை தவிர்க்கவும்.
ரிலாக்ஸ் ஆகும் பழக்கம்: மெதுவான இசை கேளுங்கள், புத்தகம் படிக்கவும்.
யோசனையை கட்டுப்படுத்தவும்: நாளையதை நாளைக்கு விட்டுட்டு அமைதியாக தூங்கவும்.
உடல் அசைவு: தினமும் சிறிது நேரம் உடற்பயிற்சி செய்யவும்.
சுற்றுப்புறத்தை அமைதியாக வைத்துக்கொள்ளவும்: ஒளி, ஒலி குறைவாக, வசதியாக தூங்கும் இடத்தை வைத்துக்கொள்ளவும். தூக்கம் உடல் மற்றும் மன அமைதிக்கான அடிப்படையாக இருக்கிறது. சரியான தூக்க பழக்கங்கள் மனநலத்தை மேம்படுத்தும். தூக்கம் என்பது பராமரிக்க வேண்டிய ஒரு முக்கியமான ஆரோக்கியப் பழக்கம். தூக்கம் போதுமான அளவில் இருந்தால், உடல் ஆரோக்கியம் மேம்படும், மனச்சோர்வு குறையும், மற்றும் நாளை இன்னும் சிறப்பாக வாழ முடியும். என மதுரையின் பிரபல மனநல ஆலோசகர் ப.ராஜ சௌந்தர பாண்டியன் தெரிவித்தார்.