ராமநாதபுரம் மாவட்டம், முமுதுகுளத்தூரைச் சேர்ந்த வனிதா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஆட்கொணர்வு மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "எனது கணவர் பாலமுருகன் CRPF 19ஆம் பட்டாலியனில் பணியாற்றி வந்த நிலையில், இரண்டாம் பட்டாலியனுக்கு மாற்றப்பட்டார். கடந்த அக்டோபர் 7ஆம் தேதி இரவு சத்திஸ்கர் சென்று அடைந்ததாக போனில் தெரிவித்தார். தினமும் எங்களைத் தொடர்பு கொண்டு பேசும் நிலையில், கடந்த அக்டோபர் 11-ஆம் தேதி எனது கணவர் பணி செய்யும் இடத்தில் இருந்து என்னை அழைத்து, காலை முதல் கேம்பில் எனது கணவரை காணவில்லை என தெரிவித்தனர்.
எனது கணவர் காணாமல் போன நிலையில் 2 குழந்தைகளுடன் மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளேன். சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டம் மாவோயிஸ்டுகள் நடமாடும் பகுதி என்பதால், எனது கணவர் அவர்களால் கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் உள்ளது. ஆகவே எனது கணவரை மீட்டு ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், சதீஷ்குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
மத்திய அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், சிஆர்பிஎஃப் வீரரின் செல்போன் imei வைத்து தேடி செல்லும் பொழுது அந்த செல்போனை வைத்திருந்த நபர் செல்போனை கீழே கிடந்து எடுத்து உபயோகப்படுத்தி வருவதாக தெரிய வந்தது என தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் தரப்பில், அவரது வங்கி கணக்கு ஏடிஎம் எண் உட்பட பல விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது ஆனால் அவை விசாரிக்கப்படாமல் உள்ளது என தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து நீதிபதிகள், சிஆர்பிஎஃப் வீரரை கண்டு பிடிப்பது தொடர்பாக விசாரணை செய்து மீண்டும் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்