கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணதாசன், திருவிகா, அலமேலு உட்பட 8 மாவட்ட ஊராட்சி குழு கவுன்சிலர்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தனர். அவற்றில்,, "நாங்கள் 8 பேரும் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு கரூர் மாவட்ட ஊராட்சி குழு கவுன்சிலர்களாக உள்ளோம். கரூர் மாவட்ட ஊராட்சி குழுவிற்கு துணைத்தலைவர் தேர்ந்தெடுப்பதற்காக அக்டோபர் 22ஆம் தேதி மறைமுக தேர்தல் நடைபெறும் என தேர்தல் அதிகாரி அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.இந்த நிலையில் அக்டோபர் 22ஆம் தேதி மதியம் 2.30 மணிக்கு கரூர் மாவட்டத்தில் உள்ள 12 மாவட்ட ஊராட்சி குழு கவுன்சிலர்கள் அனைவரும் மினிட் புக்கில் கையெழுத்திட்டோம்.

 

பின் அதிமுகவை சேர்ந்த 8 மாவட்ட ஊராட்சி குழு கவுன்சிலர்கள் சேர்ந்து திருவிகா என்பவருக்கு ஆதரவாக வேட்பு மனுவை நிரப்பி தேர்தல் அலுவலரிடம் கொடுத்தோம். இந்நிலையில் திமுகவை சேர்ந்த 4 மாவட்ட ஊராட்சி குழு கவுன்சிலர்கள் தேர்தல் நடத்தக்கூடாது என பிரச்சனை செய்தனர். உடனடியாக தேர்தல் நடத்தும் அதிகாரி தேர்தலை ஒத்தி வைப்பதாக அறிவித்தார். அதன்பின்னர் துணைத்தலைவர் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆகவே, கரூர் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் தேர்தலை நேர்மையாக நியாயமாக நடத்துவதற்கு தேர்தலை முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும். மேலும் ஓய்வு பெற்ற நீதிபதியை தேர்தல் நடத்தும் அலுவலராக நியமித்து தேர்தலை விரைவாக நடத்த உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தனர்.

 

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு, கரூர் மாவட்ட ஊராட்சிமன்ற துணைத் தலைவர் தேர்தலை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டும், அதனை அதிகாரிகள் பின்பற்றவில்லை. எனவே, தேர்தலை நீதிமன்றமே ஏற்று நடத்துகிறது, எனக்கூறி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் டிசம்பர் 17ஆம் தேதி மதியம் 2.15 மணிக்கு தேர்தல் நடத்தப்படும்" என தெரிவித்தனர்.

 

தேர்தல் ஆணையம் தரப்பில்," விதிப்படி மூன்று முறை துணைத் தலைவர் தேர்தல் ஒத்தி வைக்கப்படலாம் தற்போது மூன்றாவது முறையாகவே ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆகவே இன்னும் ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும்" என கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், "இயற்கை சீற்றம் அல்லது தவிர்க்க முடியாத காரணங்களுக்காக தேர்தலை ஒத்தி வைக்கலாம். ஆனால் இதுபோல உரிய காரணமின்றி தேர்தலை ஒத்திவைப்பது வாக்களித்த மக்களை ஜோக்கர் ஆக்குவது போல் உள்ளது. அது ஏற்கத்தக்கதல்ல எனக்கூறி, கரூர் மாவட்ட ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தேர்தலை நடத்த தமிழக தேர்தல் ஆணையத்திற்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கியும், தேர்தலை முழுமையாக வீடியோ பதிவு செய்யவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.