தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் முதல் புத்தகத் திருவிழா வருகிற 3-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியில் உள்ள தனியார் திடலில் நடக்கிறது. இந்த புத்தகத் திருவிழாவுக்காக வடிவமைக்கப்பட்ட 'லோகோ' அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. இந்த 'லோகோ'வை மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா வெளியிட்டார். அதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவின் உமேஷ் டோங்கரே பெற்றுக் கொண்டார். அந்த 'லோகோ' தேனி மாவட்ட சிறப்புகளில் ஒன்றான கோம்பை நாயின் உருவப்படத்துடன் வடிவமைக்கப்பட்டு இருந்தது.
புத்தகத் திருவிழா ஏற்பாடுகள் குறித்து ஆட்சியர் ஷஜீவனா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியபோது, முதல் முறையாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தேனியில் புத்தகத் திருவிழா நடக்கிறது. அதனை உள்ளாட்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி தொடங்கி வைக்கிறார். புத்தகத்துக்காக 40 அரங்குகளும், அரசு துறைகளின் திட்டங்கள் குறித்து 10 அரங்குகளும் அமைக்கப்படுகின்றன.
"வாசிப்பை வசமாக்குவோம்" என்ற வாசக முழக்கத்துடன் இந்த புத்தகத் திருவிழா நடத்தப்படுகிறது. புத்தகத் திருவிழாவில் தினமும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடக்கிறது. மாநில, மாவட்ட அளவிலான கலைப்போட்டிகளில் சாதனை படைத்தவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சுமார் 1,000 மாணவ, மாணவிகள் பங்கேற்கவும், மாணவ, மாணவிகளை அழைத்து வருவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாலை 5 மணிக்கு பிறகு சிறப்பு பேச்சாளர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள், மார்ச் 8-ந்தேதி சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மகளிரை பெருமைப்படுத்தும் வகையிலான நிகழ்ச்சிகள், மண்ணின் மைந்தர்களான எழுத்தாளர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. பாரம்பரிய நாய்கள் கண்காட்சியும் நடத்தப்பட உள்ளது.
Prahlad Modi: பிரதமர் மோடியின் இளைய சகோதரர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி..
புத்தகத் திருவிழா நடக்கும் இடத்தில் அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், ரூ.500-க்கு மேல் புத்தகங்கள் வாங்குபவர்களில் தினமும் 3 பேரை குலுக்கல் முறையில் தேர்வு செய்து பரிசு வழங்க திட்டமிட்டுள்ளோம். புத்தகத் திருவிழாவை வெற்றிகரமாக நடத்த தேனி மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்