மதுரை கோட்டத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு மண்பானைகளில் வைக்கப்பட்டுள்ள இயற்கை குளிர் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார்.

 

அக்னி வெயில்

 

வழக்கமாக கோடை காலம் என்றாலே வெயில் சுட்டெரிக்கும். அதுவும் அக்னி நட்சத்திர காலத்தில் தமிழ்நாட்டில் வெயில் மிக கடுமையாக வாட்டி வதைக்கும். பஞ்சாங்கத்தில் பரணி 3ஆம் காலில் சூரியன் பிரவேசிக்கும் காலத்தை தான் அக்னி நட்சத்திரம் என்று சொல்லப்படுகிறது. அந்த வகையில் நடப்பாண்டிற்கான அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் கடந்த 2 நாட்களுக்கு முன் தொடங்கி வரும் 28-ம் தேதி வரை நீடிக்க உள்ளது. அதேசமயம், கடந்த மார்ச் மாதம் முதலே தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில், வெயில் பொதுமக்களை வாட்டி வதைக்கிறது. மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் ஏற்கனவே வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகியுள்ளது. கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் வெப்ப அலையும் வீசி வருகிறது. பல இடங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு தேர்வுகள் முடிந்து விடுமுறையும் விடப்பட்டுள்ளது. மேலும் கடுமையான கோடை வெயில் வாட்டி வதைப்பதால், பொதுமக்களில் பலர், குழந்தைகளுடன் வெளியூர் சுற்றுலாக்கள் மற்றும் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வெயில் கொடுமை காரணமாக மதுரை கோட்டத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு மண்பானைகளில் வைக்கப்பட்டுள்ள இயற்கை குளிர் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா தகவல் தெரிவித்துள்ளார்.
 


கோடையில் உதவி

 

பயணிகளுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள், ரயில்வே சாரண சாரணியர், சுய உதவி குழுக்களை சேர்ந்த மகளிர், தன்னார்வலர்கள் ஆகியோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதன்படி மதுரை, திருநெல்வேலி, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி, காரைக்குடி, தென்காசி, ராமநாதபுரம், பழனி ஆகிய ரயில் நிலையங்களில் மண் பானைகளில் சேமிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே உள்ள குடிநீர் குழாய்கள் குளிர் குடிநீர் வசதி ஆகியவற்றோடு கூடுதலாக இந்த புதிய வசதி செய்யப்பட்டுள்ளது.

 

உப்பு, சக்கரை கலந்த நீர்க்கரைசல்

 

திருநெல்வேலி ரயில் நிலையத்தில் மோர், தண்ணீர் பாட்டில்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பயணிகளின் உடல் நீர் சத்து அதிகரிக்க உப்பு, சக்கரை கலந்த நீர்க்கரைசலும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த குடிநீர் கரைசல் ரயில்வே வாரிய உத்தரவுப்படி மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்பு ஒத்துழைப்புடன் வழங்கப்பட்டுவருகிறது.  ரயில் நிலையங்களில் மேலும் 20 குளிர் குடிநீர் சாதனங்கள் பொருத்தப்பட இருப்பதாக கோட்ட ரயில்வே மேலாளர் தகவல் தெரிவித்துள்ளார்.