TN 12th Results 2024
தமிழ்நாட்டில் உள்ள மாநில கல்வி பாடத்திட்டத்தில் 10,11,12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு முறை நடைமுறையில் இருந்து வருகிறது. இதில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடந்தது. சுமார் 7,60,000 பேர் தேர்வு எழுதினர். இதில் தனித்தேர்வர்கள் 8,190 பேரும் அடங்குவர். இதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணிகள் 83 மையங்களில் நடைபெற்றது. இதில் 46 ஆயிரம் முதுநிலை ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.
இந்நிலையில் திட்டமிட்டபடி மே 6ஆம் தேதியான நேற்று 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் வழக்கம்போல மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தனியார் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 96.70 சதவிகிதம் ஆகவும், அரசு பள்ளிகளில் 91.32 சதவிகிதம், அரசு உதவி பெறும் பகுதிகளில் 95.49 சதவிகிதம் ஆகவும் உள்ளது. கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் 0.58 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் 97.42% தேர்ச்சி விகிதம் மாணவி,மாணவர்கள் அடைந்துள்ளனர். இந்நிலையில் மகளின் கனவை நிறைவேற்ற தையல் தைத்து படிக்க வைக்கும் தாயின் கனவை நிறைவேற்றும் விதமாக சிவகங்கை மாணவி சாதனையை பலரும் பாராட்டி வருகின்றனர்.
ஏழை மாணவி சாதனை
சிவகங்கை அருகில் கூட்டுறவுபட்டியைச் சேர்ந்தவர் அழகர்சாமி - கலா தம்பதியர். இவர்களது மூன்றாவது மகள் நாகேஸ்வரி. தந்தை அழகர்சாமி கடந்தாண்டு உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தார். தாய் கலா மகளைப் படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக தையல் தொழில் செய்து படிக்க வைத்து வருகிறார். இருக்கும் பூர்வீக இடத்தில் விவசாயம் செய்து கொண்டும் வீட்டில் இருக்கும் ஒரு தையல் மிஷினை வைத்து தைத்து பிழைப்பு நடத்தி வந்த கலா தனது மகள் நாகேஸ்வரி தமிழ் படிக்க அதிக ஆர்வம் கொண்டிருந்ததை அறிந்து சிவகங்கை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பில் சேர்த்து தற்போது பள்ளியிலே முதல் மாணவியாக 600 க்கு 525 மதிப்பெண் பெற்று அரசுப் பள்ளியில் முதலிடத்தை பிடித்துள்ளார்.
தமிழ் மீது ஆர்வம்
இது குறித்து அப்பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில்,“ஏழை மாணவியான நாகேஸ்வரி பள்ளியில் நடக்கும் பல்வேறு போட்டிகளிலும் பங்கேற்று முதல் இடத்தை பிடிப்பார். தமிழ் மீது ஆர்வம் கொண்டவர். மாநில, மாவட்ட அளவில் பேச்சுப்போட்டி கவிதை போட்டி என பல போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை குவித்துள்ளார். தமிழக அரசு நடத்திய கலை திருவிழாவிலும் மாநில அளவில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார். தமிழில் மிகுந்த ஆர்வம் கொண்ட நாகேஸ்வரி சிறந்த பேச்சாளராக வரவேண்டும் என்ற லட்சியத்தோடு உள்ளார். சிவகங்கை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதலிடத்தை பிடித்த நாகேஸ்வரி தமிழில் மேற்படிப்பு படித்து பேச்சாளராக கவிதை தொகுப்பாளராக வரவேண்டும் என்ற இலட்சியத்தோடு உள்ளார்” என்றும் பெருமையோடு தெரிவித்தனர்.
தெரு விளக்கில் படிப்பு
மேலும் மாணவி நாகேஸ்வரியின் தாய், கலா நம்மிடம்..,” எங்கள் வீட்டில் மிகவும் வறுமையில் தான் படிக்க வைத்தேன். எனது வீடு சின்ன வீடுதான். இதனால ஒரு லைட்டு, ரெண்டு லைட்டு தான் இருக்கும். என் மகளுக்கு படிக்க தொந்தரவா இருக்கும்னு தெரு விளக்கு வெளிச்சத்தில் தான் உட்கார்ந்து படிப்பார். இப்படியான கஷ்டத்தில் தான் அவளை படிக்க வைத்தேன். ஆனாலும் படிக்கும் பள்ளியில் முதல் இடம் பிடித்தது மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது” என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.