தேனி நாடாளுமன்ற வேட்பாளர் வி.டி. நாராயணசாமியை ஆதரித்து சோழவந்தான் பகுதியில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பிஉதயகுமார் திண்ணை பிரச்சாரம் செய்தார்.

அண்ணாமலைக்கு வாய்க்கொழுப்பு:



அப்போது ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது,”அண்ணாமலை வாய்க்கொழுப்பு எடுத்து பைத்தியம் போல் பேசி வருகிறார், அதிமுகவில் யார் தலைவர் என்று ஜாதகம் கணிப்பது போல் கூறி வருகிறார். சாதாரண கவுன்சிலர் தேர்தலில் கூட நின்று வெற்றி பெற முடியாத அண்ணாமலை, பைத்தியம் பிடித்து வாய் கொழுப்பு எடுத்து பேசி இருக்கிறார். அதிமுகவின் ஜாதகத்தை கணிக்க 2 கோடி தொண்டர்களும் , 8 கோடி மக்களும் உள்ளார்கள்.

 

டாக்டர், இன்ஜினியர், வக்கீல் போன்ற படிப்புகளில் தோல்வி அடைந்து மன அழுத்தம் ஏற்பட்டு பைத்தியம் பிடிப்பது போல இன்றைக்கு நான் வெற்றி பெற்று விடுவேன் என்று டெல்லியில் கொடுத்த உத்தரவாதம் இன்றைக்கு பொய்யாய் போனதால் பைத்தியம் பிடித்தது போய் போன்று பேசி வருகிறார். கோவிலில் யாசகம் கேட்கும் ஒருவர் கோபுரத்தை பார்த்து மக்கள் கும்புடுவதை பார்த்து தன்னைத்தான் கும்பிடுகிறார்கள் என்று உளறி வருகிறான். மக்கள் அங்குள்ள அதிகாரியிடம் போய் முறையிட்டவுடன் அந்த நபரை அங்கிருந்து எதிர்திசைக்கு அப்புறப்படுத்துகிறார்கள். அப்பொழுது மக்கள் கும்பிடும் போது தன்னை கும்பிடவில்லை இறைவனை கும்பிடுகிறார்கள் என்று தெரிய வருகிறது. அதே போல தான் அண்ணாமலை நிலைமை உள்ளது.


 

அண்ணாமலை தெளிந்து விடுவார்


பா.ஜ.க..,காங்கிரஸ் ,தி.மு.க. போன்ற கட்சிகளில்சென்று இணையும் பொழுது அவர்களுக்கு மந்திரி பதவி கொடுக்கிறார்கள். இரவல் வாங்கித் தான் நிறைவேற்றிக் கொள்கிறார்கள். அ.தி.மு.க.வில் அப்படியல்ல. இங்கு ஒருவர் வெளியேறினால் 1000 தொண்டர்கள் வெகுண்டு எழுவார்கள். இந்த இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது. 2011ல் அ.தி.மு.க. இருக்காது என்று அப்போது அழகிரி சொன்னார். ஆனால் அம்மா முதலமைச்சராக வந்துவிட்டார். ஆனால், இன்றைக்கு அழகிரி இருக்கும் இடம் எல்லாம் தெரியவில்லை. தற்போது  தான் தோல்வி அடைந்து விடுவோம் என்று பயத்தால் அண்ணாமலை உளறி வருகிறார். குற்றாலத்தில் குளித்தால் பைத்தியம் தெளிவது போல, தேர்தல் முடிவுக்கு பின்பு அண்ணாமலை தெளிந்து விடுவார். அப்படி தெளியவில்லை என்றால் ஏர்வாடியில் சேர்ப்பதற்கு நாங்கள் உதவி செய்கிறோம்.

 

டெல்லி தலைவர்களை  ஏமாற்றுகிறார்


 

திராவிட இயக்கத்தில் மாலை நேர பல்கலைக்கழகமாக பொதுக்கூட்டங்கள் இருந்தது. மேடை இல்லை என்றாலும் கூட கட்டை வண்டியில் நின்று கூட பேசுவேன் என்று அண்ணா சொன்னார்.  மக்களிடம் பேசி மக்கள் ஆதரவு பெற்றார். ஆனால் இன்றைக்கு ரோடு ஷோ என்ற பெயரில் பஞ்சு மிட்டாய் விற்பவர், ஐஸ் விற்பவர்கள் எல்லாம நிற்க வைத்து மக்கள் செல்வாக்கு இருப்பதை போல கணக்கு காமித்து அண்ணாமலை ஏமாற்றி வருகிறார். இதனால் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை. இதன்மூலம் மக்களுக்கு என்ன சொல்ல போகிறார்கள்? டெல்லி தலைவர்களை தலையாட்டி பொம்மையாக மாற்றி ரோடு ஷோ நடத்துகிறார்கள்.

 

ரோடுஷோ மூலம் எந்த மாற்றம் வரப்போவதில்லை. ரோடுஷோ என்று டெல்லி தலைவர்களை நன்றாக அண்ணாமலை ஏமாற்றி வருகிறார். இந்த தேர்தலில் மத்திய மாநில அரசுகளை எதிர்த்து நாங்கள் நிற்கிறோம் இதன் மூலம் பல்வேறு சோதனைகளை எதிர்ப்புகளை எல்லாம் கடந்துதான் இப்போது தேர்தல் பணியாற்றுகிறோம்  எங்கள் மீது பல்வேறு தொல்லைகள் கொடுத்தாலும் அதை சட்டரீதியாக எடப்பாடியார் எதிர்கொண்டு  வருகிறார்" என கூறினார்.