உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் மதுரையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பச்சை கொடியசைத்து தொடங்கி வைத்த இந்த போட்டியில் காளைகளும், காளையர்களும் வெற்றிக்காக ஆடி வருகின்றனர்.


அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் காளைகளுக்கும், காளையர்களுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் அதிக காளைகளை அடக்கும் வீரருக்கும், யாருக்கும் பிடிகொடுக்காத காளைக்கும்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட உள்ளது.




இந்த நிலையில், விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சார்பில் தங்க மோதிரங்கள் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இந்த பரிசை தமிழ்நாடு ஜல்லிகட்டு பேரவைத் தலைவர் ராஜசேகரன் பெற்றார்.


போட்டியில் பங்கேற்ற அவரது 2 காளைகளும் வெற்றி பெற்றதால் ராஜசேகரனுக்கு 2 தங்க நாணயங்களையும் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். தற்போது வரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு சார்பில் 2வது சுற்று முடிவுகளின் அடிப்படையில் சித்தாலங்குடியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் 7 காளைகளையும், அலங்காநல்லூரைச் சேர்ந்த தவமணி 4 காளைகளையும், அபிசித்தர் 4 காளைகளையும் அடக்கியுள்ளனர்.




இந்த ஜல்லிக்கட்டில் பிரபல திரைப்பட நடிகர் சூரியின் ஜல்லிக்கட்டு களமிறங்கியது. அவரது காளையை மாடுபிடி வீரர் அடக்கினார். மேலும், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான காளைகள் இரண்டும் களத்தில் இறங்கி வெற்றி பெற்றுள்ளன. ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் காளைகளுக்கு பீரோ, கட்டில், மெத்தை உள்ளிட்ட பல்வேறு பரிசுகளும், ஜல்லிகட்டு காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கு இரு சக்கர வாகனம், தங்க நாணயம் உள்ளிட்ட பல்வறு பொருட்களும் பரிசாக வழங்கப்பட்டு வருகிறது.


அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை காண்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்துள்ளனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன், அமைச்சர்கள் பி.டி.ஆர்., மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர். சுமார் 1000த்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். களத்தில் காயமடையும் மாடுபிடி வீரர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவ வசதிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க: Jallikattu: சீறும் காளைகள்.. தொடங்கியது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு... பச்சைக்கொடி அசைத்து தொடங்கி வைத்தார் உதயநிதி..!


மேலும் படிக்க: Palamedu Jallikattu : பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு.. முதல் மூன்று இடங்களை பிடித்த மாடு பிடி வீரர்கள் யார் தெரியுமா..?