சி.பி.ஐயால் சம்மன் அளிக்கப்பட்ட மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட மானாமதுரை DSP சண்முகசுந்தரம் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்த வாய்ப்பு.

அஜித்குமார் வழக்கில் சி.பி.ஐ., விசாரணை
 
சிவகங்கை மடப்புரம் அஜித் குமார், நகை காணாமல் போனது தொடர்பாக, நிகிதா என்ற பெண் அளித்த புகாரின் கீழ் திருப்புவனம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அஜித்குமாரை தாக்கி விசாரணை நடத்தியதில் அவர் உயிரிழந்தார். இந்த வழக்கு கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு தனிப்படை காவலர்கள் 5  பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கானது மதுரை உயர்நீதிமன்ற அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிபிஐ சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
சி.பி.ஐ., விசாரணைக்கு நிகிதா வருகை
 
இந்நிலையில் 11ஆவது நாள் விசாரணையாக நேற்று மதியம் 2 மணி முதல் நடைபெற்றது. அஜித்குமார் கொலை வழக்கின் முக்கிய சாட்சியான மதுரை திருமங்கலத்தை சேர்ந்த கல்லூரி பேராசிரியை நிகிதா மற்றும் அவரது தாயார் சிவகாமி ஆகிய இருவரிடமும் DSP மோஹித்குமார் தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் மூன்றரை மணி நேரமாக விசாரணை நடத்தினர். நிகிதா கொடுத்த புகாரின் அடிப்படையில் தான் இந்த வழக்கு நடைபெற்றது என்பதால் நிகிதாவின் ஆஜர் முக்கியமாக பார்க்கப்பட்டது.
 
சி.பி.ஐ., 12-ஆவது நாள் விசாரணை
 
12 ஆவது நாள் விசாரணையாக சிபிஐயால் சம்மன் அளிக்கப்பட்டது. அஜித்குமாரின் உடலை உடற்கூராய்வு செய்த அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் இன்று விசாரணைக்கு ஆஜராகவுள்ளனர். இந்நிலையில் சிபிஐ டிஎஸ்பி மோஹித்குமார் தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் மதுரை ஆத்திகுளம் பகுதியில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு விசாரணைக்காக வருகை தந்துள்ளனர். இதன் மூலம் சி.பி.ஐ.,க்கு முக்கிய தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜித்தை தாக்கி விசாரணை செய்யச் சொன்ன முக்கிய அதிகாரிகள் யார் என்பது குறித்து இன்றைய விசாரணையில் சி.பி.ஐ.,க்கு தெரியவரும் என கூறப்படுகிறது.