அஜித்குமார் கொலை வழக்கு 11 ஆவது நாளாக தொடரும் சிபிஐ விசாரணை - வழக்கின் முக்கிய நபரான நகை காணாமல் போனதாக புகாரளித்த நிகிதா மற்றும் அவரது தாயாரிடம் மூன்றரை மணி நேரமாக நடந்த விசாரணை.

மடப்புரம் அஜித்குமார் உயிரிழப்பு
 
சிவகங்கை, மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார். கடந்த 27-ஆம் தேதியன்று நகை காணாமல் போனது தொடர்பாக, மதுரை திருமங்கலத்தை சேர்ந்த நிகிதா என்ற பெண் அளித்த புகாரின் கீழ் திருப்புவனம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதனையடுத்து ஜூன் 28-ஆம் தேதி திருப்புவனம் காவல் நிலையத்தில் இருந்து தனிப்படை காவல்துறையினரை விசாரணைக்காக அஜித்குமாரை அழைத்துச்சென்று கோயில் உதவி ஆணையர் அலுவலகத்தின் பின்புறம் வைத்து அஜித்குமாரை தாக்கி விசாரணை நடத்தியதில் அவர் உயிரிழந்தார். இந்த வழக்கு கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு தனிப்படை காவலர்கள் 5  பேர் கைது செய்யப்பட்டார். மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதனையடுத்து இந்த வழக்கானது மதுரை உயர்நீதிமன்ற அமர்வில் விசாரணைக்கு வந்த போது சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிபிஐ சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து சி.பி.ஐ., விசாரணை நடைபெற்று வருகிறது.
 
பேராசிரியை நிகிதா மற்றும் அவரது தாயாரிடம் விசாரணை 
 
இந்நிலையில் 11ஆவது நாள் விசாரணையாக இன்று மதியம் 2 மணி முதல் நடைபெற்றது. அஜித்குமார் கொலை வழக்கின் முக்கிய சாட்சியான மடப்புரம் கோயிலில் காரில் வைத்த நகை காணாமல் போனதாக புகாரளித்த மதுரை திருமங்கலத்தை சேர்ந்த கல்லூரி பேராசிரியை நிகிதா மற்றும் அவரது தாயார் சிவகாமி ஆகிய இருவரிடமும் DSP மோஹித்குமார் தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் மூன்றரை மணி நேரமாக  விசாரணை நடத்திய நிலையில் புறப்பட்டனர்.
 
சிசிடிவி காட்சிகள் காண்பிக்கப்பட்டது
 
இதனிடையே  அஜித் குமாரின் வீட்டின் இடது புறம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த காட்சிகளில், சம்பவம் நடந்த நாளும் அதற்கு முந்தைய நாளும், தனிப்படை காவல்துறையினர் அஜித் குமார் மற்றும் அவரது நண்பர்களை எப்போது, எப்படி விசாரணைக்காக அழைத்துச் சென்றார்கள் என்பதற்கான ஆதாரங்கள் பதிவாகியுள்ளன. இதற்கிடையில், அஜித் குமாரின் தம்பி நவீன் குமார் மற்றும் அவரது சக ஊழியர்கள் வினோத்குமார், பிரவீன் குமார் ஆகியோர் சிபிஐ அதிகாரிகளால் அழைக்கப்பட்டு, அவர்களிடம் சிசிடிவி காட்சிகள் காண்பிக்கப்பட்டு, சம்பவ நாளில் நடந்த நிகழ்வுகள் குறித்து திருமண மண்டபத்திற்குள் வைத்து விசாரணை நடத்திப்பட்டு வருகிறது‌. அப்போது சம்பவத்திற்கான சாட்சிகளையும் பதிவுகளையும் உறுதி செய்யும் பணியில் சிபிஐ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.