உசிலம்பட்டி அருகே ஆர்.பி.உதயக்குமார் பங்கேற்ற விழாவில், திமுகவிலிருந்து வந்தவர்களுக்கு பதவியா என அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது - இதனை கண்ட ஆர்.பி.உதயக்குமார் கோபத்தில் கண்டித்து சமாதான படுத்தினார்.

 

அ.தி.மு.க., உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா

 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை அதிமுக பேரூர் கழகத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா,  முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் வழங்கி கொண்டிருந்த போது, 2 மற்றும் 10, 12 வது வார்டு பகுதியில் ஒவ்வொரு வார்டிலும் இரு கிளைச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், யார் உறுப்பினர் அடையாள அட்டையை பெருவது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது திமுகவில் இருந்து வந்தவர்களுக்கு பதவி வழங்குவதா எனவும், அவர்களிடமிருந்து நாங்கள் உறுப்பினர் அட்டையை பெறுவதா என மூத்த அதிமுக நிர்வாகிகள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

 


 

அதிமுகவினர் வாக்குவாதம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

 

இதனை கண்டு ஆத்திரமடைந்த ஆர்.பி.உதயக்குமார், வாக்குவாதம் செய்தவர்களை கோபத்துடன் கண்டித்து சமாதானப்படுத்தி, தானே மைக் மூலம் ஒவ்வொரு வார்டு நிர்வாகிகளையும் அழைத்து உறுப்பினர் அடையாள அட்டைகளை வழங்கினார். முன்னாள் அமைச்சர் முன்னிலையிலேயே திமுகவிலிருந்து வந்தவர்களுக்கு பதவியா என அதிமுகவினர் வாக்குவாதம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

அதிமுக நிர்வாகிகளுக்கு முக்கியதுவம் வேண்டும்

 

இது குறித்து அ.தி.மு.க., நிர்வாகிகள் சிலர் நம்மிடம் கூறுகையில்..,” அ.தி.மு.க.விற்காக பல ஆண்டுகள் உழைத்துள்ளோம். ஆனால் திடீர் என தி.மு.க.,வில் இருந்து குதித்தவர்களுக்கு பதவி, முக்கியதுவம் கொடுப்பது என்ன நியாயம்?. கடந்த சில நாட்களுக்கு முன்பு கள்ளர் சீரமைப்பு பள்ளியை நேரடியாக அரசு பள்ளிக் கல்வித்துறையுடன் இணைக்கக் கூடாது என்று ஆர்பாட்டம் நடைபெற்றது. அப்போது முக்குலத்தோர் அமைப்பை சேர்ந்த மற்றொரு பிரிவு 10.5% இட ஒதுக்கீட்டிற்கு முயற்சி எடுத்த காரணத்திற்காக எதிர்த்து ஆர்பாட்டம் நடத்தினர். இப்படி உசிலம்பட்டி பகுதியில் அதிமுகவிற்கு எதிரான மனநிலை இருக்கும் போது தி.மு.க.,வில் இருந்து வந்த நபர்களுக்கு முக்கியதுவம் கொடுப்பது எந்த வகையில் நியாயம். இது அதிமுகவை பின்னோக்கி எடுத்துச் செல்லும். எனவே தி.மு.க.,வில், இருந்து வரும் நபர்களுக்கு முக்கியதுவம் கொடுக்காமல் உண்மையான அதிமுக தொண்டர்களுக்கு முக்கியதுவம் கொடுக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.