Manipur Violence: மணிப்பூரில் அமைதி திரும்ப மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் பேரணியாக சென்றனர்.

Continues below advertisement

கட்டுக்கடங்காத மணிப்பூர் கலவரம்:

மணிப்பூரில் மெய்தி மற்றும் குக்கி இன மக்களிடையே வெடித்த மோதல், 16 மாதங்களை கடந்து தணிந்தபாடில்லை. இருதரப்பு மோதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், பெரும் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் இயல்புந்லை திரும்பியுள்ளதாக ஆளும் பாஜக அரசு தெரிவித்தாலும், மோதல்களால் தினசரி உயிரிழப்பு என்பது நிகழ்ந்து கொண்டே தான் உள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் பரபரப்பான சூழலே நிலவுகிறது.

டிரோன், ராக்கெட் லாஞ்சர் தாக்குதல்:

உருட்டை கட்டைகள், துப்பாக்கிகளை கொண்டு தாக்கிக் கொண்டது எல்லாம் முடிய, தற்போது இருதரப்பு மோதல் என்பது அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி, ராக்கெட் லாஞ்சர்கள் மற்றும் டிரோன்களை கொண்டு தாக்குதல்கள் அரங்கேற்றப்பட்டுள்ளன. இதனால் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதோடு, பொதுமக்களிடையே அச்சமும் நிலவுகிறது. மாநிலத்தின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

தீப்பந்தம் ஏந்தி பெண்கள் பேரணி:

இந்நிலையில், மணிப்பூரில் நிலவும் மோதலைத் தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டித்தும், அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில், பெண்கள் நேற்று தீப்பந்தம் ஏந்தி பேரணி சென்றனர். 16 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் நெருக்கடியை மாநிலம் எதிர்கொண்டு வரும் நிலையில், இந்த போராட்டம் அமைதிக்கான மற்றொரு அழைப்பாக அமைந்துள்ளது. நூற்றுக்கணக்கான  பெண்கள் சேர்ந்து THAU மைதானத்தில் கூடி சுமார் 10 கிலோமீட்டர் தூரம் அணிவகுத்துச் சென்றனர். அசம்பாவிதங்களை தவிர்க்கும் நோக்கில் ராஜ் பவன் மற்றும் முதல்வர் இல்லம் போன்ற முக்கியமான பகுதிகளைத் தவிர்த்தனர். இதேபோன்று மணிப்பூரின் பல்வேறு பகுதிகளிலும், பெண்கள் தீப்பந்தம் ஏந்தி பேரணியில் ஈடுபட்டனர்.

பேரணியின் போது எழுந்த முழக்கங்கள்:

மணிப்பூரின் ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்தும், அமைதியை மீட்டெடுக்க மத்திய அரசை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர். அதன்படி,  “மணிப்பூரைச் சிதைக்காதீர்கள்,” “எங்களுக்கு அமைதி வேண்டும்,” மற்றும் “மணிப்பூர் வாழ்க” என்பன உள்ளிட்ட முக்கிய முழக்கங்கள் பேரணியில் இடம்பெற்றன. கிராம தன்னார்வலர்களை விடுவிக்கவும், காவல்துறை தலைமை இயக்குனர் மற்றும் பாதுகாப்பு ஆலோசகரை நீக்கவும் வலியுறுத்தினர். 

பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்:

அசாம் ரைபிள்ஸ் பிரிவினர் மணிப்பூரில் ட்ரோன் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக மத்திய ரிசர்வ் போலீஸ் படையும் அழைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் பிரைன் சிங்கும் நேற்று மாநில ஆளுநரைச் சந்தித்து, புதியதாக வெடித்துள்ள வன்முறை தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.